எங்களைப் பற்றி சாட்டிங் கனவுத் தொழிற்சாலை e-புத்தகம்

 
 
 
 
 
Welcome to South Indian Crime Point

இன்றைய முக்கிய செய்திகள் (08-01-2017) காலை, IST-05.00 AM மணி, நிலவரப்படி,

South Indian Crime Point as your Homepage

SOUTH INDIAN CRIME POINT Follows.... Please Click the Buttons

விமர்சனங்களை கண்டு அஞ்சவில்லை
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை
ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர்
பாரதீய ஜனதா தேசிய செயற்குழுவில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி, ஞாயிறு, ஜனவரி 08,2017, 05:00 AM IST

பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக கூறினார்.

தேசிய செயற்குழு கூட்டம்

பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

செயற்குழு கூட்டத்தை கட்சியின் தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்து பேசினார். நேற்று நடைபெற்ற இறுதி நாள் கூட்டத்தில் பிரதமர் மோடி நிறைவுரை ஆற்றினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:–

ஏற்றுக்கொண்டனர்

ஊழல், கருப்புபணத்தை ஒழிப்பதற்கான நீண்டகால நடவடிக்கையின் ஒரு பகுதிதான், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து நீக்கியது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும். ஊழல் சமூகத்துக்கு எதிரான மிகப்பெரிய தீங்கு. ஒழுங்குமுறையற்ற பணப்புழக்கம் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு தடையாக விளங்குகிறது.

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன. பல்வேறு அசவுகரியங்கள் ஏற்பட்ட போதிலும் ஏழைகள் மத்திய அரசின் நடவடிக்கையை மனதார ஏற்றுக்கொண்டு உள்ளனர். இந்த பிரச்சினையில் அரசின் நோக்கத்தை புரிந்து கொண்டு மனஉறுதியுடன் ஒத்துழைக்கும் மக்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விமர்சனங்கள்

இந்த பிரச்சினையில் விமர்சனங்களை வரவேற்கிறோம். ஆனால் அரசுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டு நாம் பயந்துவிடப்போவது இல்லை. நம்மிடம் நேர்மை இருக்கிறது. எனவே ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாழ்ந்தவன் நான். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஏழைகளின் நன்மதிப்பை பெற பாரதீய ஜனதா கட்சியினர் பாடுபடவேண்டும். மக்களுக்காக செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையை போன்றது.

பா.ஜனதாவுக்கு சாதகம்

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் சூழ்நிலை பாரதீய ஜனதாவுக்கு சாதகமாக உள்ளது. எனவே பாரதீய ஜனதா தொண்டர்கள் வாக்குச்சாவடி மட்டத்தில் குழுக்கள் அமைத்து நமது வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடவேண்டும்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை அரசே ஏற்கும் பிரச்சினையில் வெளிப்படைத்தன்மை வேண்டும். பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது போன்ற தேர்தல் சீர்திருத்தங்களில் அரசியல் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மோடியின் பேச்சு விவரங்களை பின்னர் நிருபர்களிடம் தெரிவித்த பாரதீய ஜனதா மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத், அடுத்த தேசிய செயற்குழு கூட்டம் வருகிற ஏப்ரல் 15 மற்றும் 16–ந் தேதிகளில் நடைபெறும் என்றும், ஆனால் அந்த கூட்டம் நடைபெறும் இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

தீர்மானம்

தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையை பாராட்டி நிதி மந்திரி அருண்ஜெட்லி கொண்டு வந்த தீர்மானம் அனைத்து உறுப்பினர்களுடன் ஆதரவுடன் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை அருண்ஜெட்லி தாக்கல் செய்து பேசுகையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கை போன்ற பல்வேறு முக்கிய முடிவுகளை மத்திய அரசு எடுத்து இருப்பதாகவும், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரத்தில் எந்த மோசமான விளைவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். நவம்பர் மாத இறுதி புள்ளிவிவரங்களின்படி மேற்கு வங்காளம் தவிர அனைத்து மாநிலங்களின் வருவாய் அதிகரித்து இருப்பதாகவும் அப்போது அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன்

தீர்மானம் குறித்து வர்த்தக மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:–

உயர் ரூபாய் நோட்டுகள் மீதான தடை நாட்டின் நலனுக்காக எடுக்கப்பட்ட கடுமையான முடிவுதான். ரூபாய் நோட்டு தடையால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்க இயலாது. பிரதமர் கேட்ட 50 நாட்கள் அவகாசத்துக்கு பின்பு நிலைமை சீரடைந்து உள்ளது. இந்த கால கட்டத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்கும் விதமாக மத்திய அரசு அன்றாடம் நடவடிக்கை எடுத்தது.

அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை 80 சதவீத மக்கள் ஆதரித்து இருக்கின்றனர். கருப்பு பணத்தை ஒழித்துக்கட்ட கடந்த 2½ ஆண்டுகளில் சில தைரியமான முடிவுகளை மோடி அரசு எடுத்து உள்ளது.

தப்பமுடியாது

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவி ஏற்றவுடன், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பது பற்றி சில நாடுகளுடன் விவாதிக்கப்பட்டும் இருக்கிறது.

இந்த பிரச்சினை தொடர்பாக முந்தைய அரசு அரை குறையாக செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன. எனவே வரி ஏய்ப்பு செய்பவர்கள் எந்த வழியிலும் தப்பிக்க முடியாது.

இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி கொல்லப்பட்டார்
புதிய புத்தகத்தில் திடுக்கிடும் தகவல்

கொல்கத்தா, ஞாயிறு, ஜனவரி 08,2017, 05:00 AM IST

இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராடிய தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர், 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந்தேதி தைபேயில் நடந்த விமான விபத்தில் இறந்தார் என்று கூறப்பட்டு வருகிறது. நேதாஜி வாழ்க்கை வரலாறு பற்றிய ரகசிய ஆவணங்களை கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டபோதும் அவர் எப்படி இறந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இதுபற்றி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி. பக்ஷி, “போஸ்: தி இந்தியன் சாமுராய்–நேதாஜி அண்ட் தி ஐ.என்.ஏ. மிலிடரி அசஸ்மெண்ட்“ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

ஜப்பானுக்கான முந்தைய சோவியத் ரஷிய தூதர் ஜேக்கப் மாலிக் உதவியுடன் டோக்கியோவில் இருந்து நேதாஜி சைபீரிய பகுதிக்கு தப்பிச் சென்றார். அங்கு 3 வானொலி நிலையங்களையும் நிறுவினார். இது, பின்னர் இங்கிலாந்து ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதனால் நேதாஜியிடம் விசாரணை நடத்த தங்களை அனுமதிக்கவேண்டும் சோவியத் ரஷியாவிடம் கோரிக்கை வைத்தது. இந்த விசாரணையின்போதுதான் இங்கிலாந்து ராணுவத்தால் நேதாஜி சித்ரவதை செய்து கொல்லப்பட்டார். அவர் விமான விபத்தில் இறக்கவில்லை. இதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 31–ந்தேதி தொடங்குகிறது
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதுடெல்லி, ஞாயிறு, ஜனவரி 08,2017, 05:00 AM IST

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31–ந் தேதி தொடங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அன்று நடைபெறும் இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்துகிறார்.

ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 4–வது வாரத்தில் தொடங்கும்.

பட்ஜெட் கூட்டத்தொடரில் மாற்றம்

முதலில் ரெயில்வே பட்ஜெட்டும், அடுத்து பொருளாதார ஆய்வு அறிக்கையும், தொடர்ந்து பொது பட்ஜெட்டும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

பொது பட்ஜெட்டைப் பொறுத்தமட்டில், அது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்படும். இதன் காரணமாக பட்ஜெட் தொடர்பான பணிகள் மே மாதம் மத்தியில்தான் முடியும்.

ஆனால் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, ஏப்ரல் 1–ந் தேதி நிதி ஆண்டு தொடங்குகிறபோது, பட்ஜெட்டும் அமலுக்கு வந்துவிடுகிற விதத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்து, அது தொடர்பான பணிகளை மார்ச் மாதத்துக்குள் முடித்து விட திட்டமிட்டுள்ளது.

மத்திய அரசு முடிவு

அதற்காக பட்ஜெட் கூட்டத்தொடரை வழக்கத்துக்கு மாறாக ஜனவரி 31–ந் தேதி கூட்ட மத்திய அரசு முடிவு செய்தது.

பிப்ரவரி 1–ந் தேதி ரெயில்வே பட்ஜெட்டுடன் இணைத்து பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து விடவும் திட்டமிட்டது. இது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் கடந்த 3–ந் தேதி டெல்லியில் கூடி முடிவு எடுத்தது.

இது தொடர்பான பரிந்துரை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

5 மாநில தேர்தல்

ஆனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டில் வாக்காளர்களை கவருகிற வகையில், கவர்ச்சி திட்டங்கள் இடம்பெற வாய்ப்பு உண்டு என்பதால், அது மத்தியில் ஆளுகிற பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு சாதகமாக அமைந்து விடும் என கருதி, பட்ஜெட் கூட்டத்தொடரை தள்ளிப்போட வேண்டும் என்று காங்கிரஸ், ஐக்கிய
ஜனதாதளம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தி.மு.க., ராஷ்டிரீய ஜனதாதளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள், தலைமை தேர்தல் கமி‌ஷனர் நசீம் ஜைதியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இது தொடர்பாக மத்திய மந்திரி சபை செயலாளர் பி.கே.சின்கா பதில் அளிக்குமாறு தேர்தல் கமி‌ஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்பு

ஆனாலும், திட்டமிட்டபடி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், 31–ந் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று வெளியிட்டார்.

பாராளுமன்றம் புதிய ஆண்டில் முதல் முறையாக கூடுவதால், அன்று (31–ந் தேதி) பாராளுமன்ற மக்களவை, மேல்–சபை கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகிறார். அவர் அரசின் திட்டங்கள் பற்றி தனது பேச்சில் விரிவாக எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து பட்ஜெட் பிப்ரவரி 1–ந் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்றும், புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காதது ஏன்?
மத்திய மந்திரி விளக்கம்

புதுடெல்லி, ஞாயிறு, ஜனவரி 08,2017, 05:00 AM IST

கீழடி ஆய்வுக்கு நிதி ஒதுக்காதது ஏன் என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்தார்.

அகழ்வாய்வு முடக்கம்

மதுரை–சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்த கீழடி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அகழ்வாய்வு நடத்தப்பட்டு வந்தது. அப்போது 2,500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் வசித்ததற்கான வீடுகள், பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அடையாள சின்னங்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், இந்த கிராமத்தில் அகழ்வாய்வு பணிகள் எதுவும் தற்போது நடைபெறவில்லை. மத்திய அரசு இந்த ஆண்டு ஆய்வுக்கான நிதியை ஒதுக்காததால் இந்த பணிகள் நடைபெறாமல் முடங்கி உள்ளது.

மு.க.ஸ்டாலின் கோரிக்கை

இதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

நேற்று முன்தினம் அவர் விடுத்த அறிக்கையில், ‘‘தமிழர்களின் கலாசார சின்னமாக திகழ்ந்த கீழடியில் தொடர்ந்து அகழ்வாய்வு எதுவும் நடைபெறாதது அதிர்ச்சி தருவதாக உள்ளது. இந்த அகழ்வாய்வுக்கு தேவையான நிதியை ஒதுக்காததும் வருத்தம் அளிக்கிறது. எனவே கீழடி ஆய்வுக்கு போதிய நிதியை மத்திய அரசு ஒதுக்கி அங்கு ஆய்வை தொடரவேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டும் இருந்தார்.

மந்திரி விளக்கம்

இதற்கு மத்திய கலாசார மற்றும் சுற்றுலாத்துறை ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மா தனது டுவிட்டர் பதிவில் நேற்று விளக்கம் அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், ‘‘கீழடியில் கடந்த 2 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்து இன்னும் அறிக்கை தயாரிக்கப்படவில்லை. இதன் காரணமாகத்தான் அங்கு ஆய்வு நடத்தப்படுவது இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது’’ என்று கூறி உள்ளார்.

நேற்றைய செய்திகள்

© 2016
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-7200557999
+91-9444264100
+91-9841523276

No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments

சந்தா விபரம் விளம்பரம் செய்ய