Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
முக்கிய செய்திகள் (08-03-2010) காலை,IST- 05.00 மணி,நிலவரப்படி,
ஆஸ்கர் விருது அறிவிப்பு; சிறந்த துணை நடிகையாக கிறிஸ்டோப் வால்ஸ்
சினிமா உலகில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவிலன் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட்டில் நடந்து வருகிறது. இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ் படத்தில் நடித்தற்காக கிறிஸ்டோப் வால்ஸ்க்கு வழங்கப்பட்டது. சிறந்த பாடலாக வெயரி கைண்ட் ( கிரேசி ஹார்ட் திரைப்படம்) என்ற பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாராளுமன்றம், சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள்: மசோதா இன்று நிறைவேறுகிறது
பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, முதன் முதலில் கடந்த 1997-ம் ஆண்டு குஜ்ரால் பிரதமராக இருந்தபோது அறிமுகம் செய்யப்பட்டது.
ஆனால், கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. பின்னர், வாஜ்பாய் ஆட்சி காலத்திலும் அப்போதைய சட்ட மந்திரி ராம் ஜெத்மலானி முழு முயற்சி எடுத்தார்.
ஆனால், முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் எதிர்ப்பாலும், அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவோடு அந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என பா.ஜனதா கருதியதாலும் மீண்டும் கைவிடப்பட்டது.
இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது டெல்லி மேல்-சபையில் மகளிர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
முன்பு போலவே, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜ்வாடி போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மகளிர் 33 சதவீத இடஒதுக்கீட்டுக்குள் பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என அந்த கட்சிகள் வலியுறுத்தின.
எனினும், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு உறுதியாக உள்ளது.
ஒருமித்த ஆதரவுக்காக 13 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகளும் முழு ஆதரவை தெரிவித்துள்ளன.
அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். டெல்லி மேல்-சபையை பொறுத்தவரை, அதற்கு அதிகமாகவே ஆதரவு இருக்கிறது.
டெல்லி மேல்-சபையின் மொத்த இடம் 245. நியமன எம்.பி.க்கள் மற்றும் காலி இடங்கள் 12 போக மீதி 233 பேர் உள்ளனர். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுக்கு 155 எம்.பி.க்கள் வாக்களித்தால் போதும்.
ஆனால் காங்கிரஸ்-71, பா.ஜனதா-45, மார்க்சிஸ்ட்-15, அ.தி.மு.க.-7, தேசியவாத காங்கிரஸ்-6, இந்திய கம்யூனிஸ்டு-5, தி.மு.க.-4, பிஜூ ஜனதா தளம்-4, தெலுங்கு தேசம்-2, திரிணாமுல் காங்கிரஸ்-2, பார்வர்டு பிளாக்-1 என மொத்தம் 162 எம்.பி.க்களின் ஆதரவு இருக்கிறது.
இது குறித்து பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பி.கே.பன்சால் கூறுகையில், "மகளிர் இடஒதுக்கீடு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில், எண்ணிக்கையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. எனினும், அனைவரும் ஒருமித்த ஆதரவு அளிக்குமாறு நம்பிக்கையுடன் அனைத்து கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம்'' என்றார்.
ஆனால் ராஷ்டிரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங், ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ் ஆகியோர் சட்ட மசோதாவை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.
அதே நேரத்தில், ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார், மகளிர் சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மசோதாவை ஆதரித்து வாக்களிக்குமாறு கட்சி தலைமைக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை சரத்யாதவ் நிராகரித்து விட்டார்.
மசோதாவுக்கு எதிராக வாக்களிக்குமாறு சமாஜ்வாடி கட்சியும், ராஷ்டிரீய ஜனதா தளமும் தங்கள் கட்சி எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவை பிறப்பித்துள்ளன. மேலும், மசோதாவுக்கு எதிராக மேல்-சபையில் அமளியில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளன.
ஆனால், கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் டெல்லி மேல்-சபையில் மகளிர் மசோதா 3-ல் 2 பங்கு மெஜாரிட்டியுடன் நிறைவேறுவது உறுதியாகி விட்டது. கடந்த 13 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அந்த மசோதா, நூறாவது சர்வதேச மகளிர் தினமான இன்று பெண்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய பரிசாக அமைகிறது.
டெல்லி மேல்-சபையில் நிறைவேறியதும், அடுத்த வாரமே பாராளுமன்றத்திலும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படும்.
பாராளுமன்றத்தில் மொத்த இடங்கள் 543. அதில், மூன்றில் இரண்டு பங்கான 362 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ்-208, பா.ஜனதா-116, நான்கு இடதுசாரி கட்சிகள்-24 என 348 பேருடைய ஆதரவு உறுதியாக இருக்கிறது. ஏற்கனவே காங்கிரசும், பா.ஜனதாவும் தங்கள் எம்.பி.க்களுக்கு மூன்று வரி கொறடா உத்தரவை பிறப்பித்து விட்டன.
இது தவிர திரிணாமுல் காங்கிரஸ்-19, தி.மு.க.-18, பிஜூ ஜனதா தளம்-14, அ.தி.மு.க-9, தேசியவாத காங்கிரஸ்-9, தெலுங்கு தேசம்-6, ம.தி.மு.க.-1, என இதர கட்சிகளின் ஆதரவும் இருக்கிறது. எனினும், அதிக ஆதரவோடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கருதுகிறது.
எனவே, 21 எம்.பி.க்களை கொண்ட பகுஜன் சமாஜ் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து நீக்கப்பட்ட அல்லது சுயேச்சை எம்.பி.க்களின் ஆதரவை கோரி வருகிறது. அதற்காக ஜெயப்பிரதா, ஜஸ்வந்த் சிங் போன்ற எம்.பி.க்களுக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பன்சால் விருந்து அளித்தார்.
பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியதும் ஜனாதிபதி ஒப்புதலுடன் அரசியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
மத்திய அரசின் முறையான அறிவிக்கைக்கு பிறகு, அந்த சட்டம் அமலாகும். அடுத்த தேர்தலில் இருந்தே பாராளுமன்றம் மற்றும் அந்தந்த மாநில சட்டசபை தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த சட்டம் தொடர்ந்து அமலில் இருக்கும். பெண்களுக்கென ஒதுக்கப்படும் பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள், ஒவ்வொரு தேர்தலின் போதும் சுழற்சி முறையில் மாற்றப்படும். அந்தந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
பெண்களுக்குக்கான இட ஒதுக்கீடு மசோதா: ராஜ்யசபாவில் இன்று தாக்கல்
லோக்சபா மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ராஜ்யசபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மசோதாவுக்கு பா.ஜ., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேநேரம் முலாயம் சிங் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இம்மசோதாவை நிறைவேற்றி 13 ஆண்டு கனவை நனவாக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மேலும், சர்வதேச பெண்கள் தினமான இன்று, இம்மசோதா தாக்கல் செய்யப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேற்கு வங்காள ஆசிரியரை மீட்க முற்றுகை
மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக் கொலை
மேற்கு வங்காள மாநிலம் மிட்னாபுர் மாவட்டத்தில் உள்ள சரேங்கா என்ற இடத்தில் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்த ரஞ்சித்துலே என்ற ஆசிரியரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர்.
அவரை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் உள்ள 6 மாவோயிஸ்டு தீவிரவாதிகளை விடுதலை செய்யுமாறு நிபந்தனை விதித்தனர்.
இந்த நிலையில், கோல்டோர் பகுதியில் உள்ள காட்டுக்குள் அந்த ஆசிரியருடன் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே, போலீசாரும் துணை ராணுவத்தினரும் நேற்று சுற்றி வளைத்தனர்.
அதைத் தொடர்ந்து, கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இறுதியில் குர்சரண் என்ற மாவோயிஸ்டு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், 5 பேர் காணமடைந்தனர்.
இது தவிர, மக்கள் போராட்ட குழுவை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சூதாட்ட கிளப்களில் ரெய்டு
கோவை நகரில் உள்ள சூதாட்ட கிளப்களில் போலீசார் திடீர் சோதனை நடத்தியத்தில், சூதாடிய 93 பேர் பிடிபட்டனர்; ரூ.3.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, ஆவராம் பாளையம் ரோட்டில் பேலஸ் கிளப் உள்ளது. இம்மனமகிழ் மன்றத்தில் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலையடுத்து, கமிஷனர் உத்தரவின் பேரில், உதவிகமிஷனர் நகராஜ் தலைமையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கிளப் மேலாளர் ஜெயக்குமார் உட்பட 69 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.3 லட்சம் பறிமுதல் க்ஷசெய்யப்பட்டது. இதேபோல், ஜி.கே.டி., நகரில் உள்ள கிரின் போர்ஸ் கிளப்பில் சூதாட்டம் நடந்து வந்தது. இங்கு நடந்த சோதனையில், சரவணக்குமார் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மூலம் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு எதிராக
காங்கிரஸ், பா.ஜனதா சதி; லாலு, முலாயம்சிங் குற்றச்சாட்டு
ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள் மசோதா, ஒரு அரசியல் பிழை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்கள், பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு வந்து விடாமல் தடுப்பதற்காக, காங்கிரசும், பா.ஜனதாவும் இணைந்து செய்த சதித்திட்டம்தான், இந்த மசோதா. பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கூட கொடுங்கள்.
ஆனால் ஒடுக்கப்பட்ட பெண்களின் நலனை புறக்கணிக்காதீர்கள். நான் பெண்கள் மசோதாவை இறுதிவரை எதிர்ப்பேன். இதற்காக சபை காவலர்களால் வெளியேற்றப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு லாலு கூறினார்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், லக்னோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, மிகவும் ஆபத்தானது. இது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் பெண்களை பாராளுமன்றத்துக்கு வர விடாமல் தடுக்கும் சதி. காங்கிரசும், பா.ஜனதாவும் மேற்கண்ட சமூகங்களுக்கு எதிரானவை.
எனவே, அந்த சமூகத்தினர் தலைவராக உருவாவதை தடுக்கும் சதித்திட்டத்துடன், இந்த மசோதாவை உருவாக்கி உள்ளனர். இந்த சதியை நான் மக்களிடம் அம்பலப்படுத்துவேன்.
சோனியா காந்தி, மாயாவதி, மம்தா, ஜெயலலிதா உள்ளிட்டோர் இடஒதுக்கீடு இல்லாமலேயே பதவிக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக அவர்கள் கட்சியினர் செயல்படுவது இல்லை. ஆகவே, பெண்கள் பதவிக்கு வர இடஒதுக்கீடு தேவையில்லை.
காங்கிரஸ் தலைவரே ஒரு பெண்தான். அவரது கட்சியில் 33 சதவீத தேர்தல் டிக்கெட்டை பெண்களுக்கே கொடுக்கட்டுமே? யார் தடுக்கப்போகிறார்கள்? சொல்லப்போனால், 100 சதவீத தொகுதிகளையும் பெண்களுக்கே கொடுக்கலாம்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதுதான் நோக்கம் என்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஏன் இடஒதுக்கீடு அளிக்கவில்லை? கல்வி, வேலைவாய்ப்பில் 40 சதவீதமோ, 50 சதவீதமோ இடஒதுக்கீடு அளித்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை.
அதை விட்டுவிட்டு, பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இடஒதுக்கீடு அளிப்பது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முஸ்லிம் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும். இப்போதே குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து எந்த முஸ்லிம் எம்.பி.யும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இடஒதுக்கீடு வந்துவிட்டால், பெண் முஸ்லிம் எம்.பி.க்களை பார்ப்பதே அரிதாகி விடும்.
எனவே, உள்ஒதுக்கீடு அளிக்காமல், தற்போதைய வடிவத்தில் மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். இறுதிவரை எதிர்ப்போம். வேண்டுமானால், அனைத்துக்கட்சிகளும் 20 சதவீத தேர்தல் டிக்கெட்டுகளை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாம்.
இந்த யோசனையை வாஜ்பாய் ஆட்சியில் ஏற்றுக்கொண்டு, வரைவு மசோதா தயாரித்தனர். ஆனால், இப்போது காங்கிரசும், பா.ஜனதாவும் சேர்ந்து கொண்டு, அந்த வரைவு மசோதாவை திருத்தி விட்டன.
இவ்வாறு முலாயம்சிங் கூறினார்.
இதற்கிடையே, பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டால்தான், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடா அறிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத்யாதவ், பெண்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியை சேர்ந்த பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் அக்கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, மசோதா குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக, சரத் யாதவ் இல்லத்தில் இன்று அக்கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், பெண்கள் மசோதாவை ஆதரிப்பது என முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேட்டுபாளையம் அருகே பஞ்சாலையில் பயங்கர தீ விபத்து
மேட்டுபாளையம் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமானது. கோவை மாவட்டம் மேட்டுபாளையம் அருகே பத்திரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், வெல்ஸ்புரம் என்னும் இடத்தில் டர்க்கி டவல் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் நள்ளிரவு 2மணியளவில் மின்கசிவு காரணமாக பயங்ர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த ஆலையில் வைக்கப்பட்டு பலகோடி மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசமிகன. தொடர்ந்து தீ பற்றி எரிகிறது. தீயை அணைக்க தீயைணைப்பு வீரர்கள் 3மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.
குற்றச்சாட்டுகள் பற்றி நித்யானந்தா சாமியார் வீடியோவில் தோன்றி பரபரப்பு பேச்சு
"சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை''
நித்யானந்தா சாமியார் நேற்று திடீர் என்று வீடியோ காட்சியில் தோன்றி `நான் சட்ட ரீதியாக எந்த தவறையும் செய்யவில்லை, உண்மை வெளிவரும் வரை பொறுமையாக இருங்கள்' என்று சீடர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல்வேறு இடங்களில் ஆசிரமம் நடத்தி வருபவர் நித்யானந்தா சாமியார். இவர் நடிகை ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் டி.வி. மற்றும் பத்திரிகைகளில் வெளியானது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் வீடியோவில் பேசிய ஆடியோ விடியோ அடங்கிய சி.டி.யை அவரது வக்கீல் ஸ்ரீதர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களுக்கு கொடுத்தார். அந்த வீடியோ காட்சியில் நித்யானந்தா சாமியார் பேசியதாவது:-
உங்கள் அனைவரையும் வணங்குகிறேன். கடந்த சில நாட்களாக என் மீதும், தியான பீடத்தின் சங்கத்தின் மீதும், பல குற்றங்களும், வதந்திகளும் பரப்பப்பட்டு வருகிறது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.
அதே நேரத்தில் உலகம் முழுவதும் இருந்தும் என் பக்தர்கள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருடைய அன்பையும், ஆதரவையும் இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பெற்றுக்கொண்டிருக்கின்றேன்.
எனது செய்கையாலும், தியானங்களாலும் பயன் அடைந்த அன்பர்களுக்கும், பக்தர்களுக்கும் என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளும், வதந்திகளும் கவலையளிப்பதாக உள்ளது.
எல்லோருக்கும் ஆணித்தரமாக சொல்லவிரும்புகிறேன். சட்ட ரீதியாக எந்த தவறையும் நானோ, தியான பீடமோ செய்யவில்லை, நாங்கள் இந்த குற்றச்சாட்டுகளையும், வதந்திகள் சார்ந்த எல்லாவிதமான செய்திகளையும், உண்மைகளையும் திரட்ட முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கும், வதந்திகளுக்கும் பின்னால் இருக்கும் காரணம், அவர்களின் மனஅமைப்பு. இவைகளில் இருக்கும் பொய்கள் அனைத்தையும் கண்டறிய எல்லா உண்மைகளையும் திரட்டிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த எல்லா குற்றச்சாட்டுகள் பற்றியும் மிகத்தெளிவான விளக்கத்தை விரைவில் அளிக்கின்றேன். தயவு செய்து அந்த செய்திகளை சேகரிக்கின்ற சில நாட்கள் வரை மட்டும் பொறுமையோடு இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லாவிவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் எந்த முடிவுக்கும் நீங்கள் வரவேண்டாம் என்று எல்லோரையும் மனம் உருகி கேட்டுக்கொள்கிறேன்.
எல்லா உண்மைகளும், எல்லா சத்தியங்களும் உங்களுக்கு நிச்சயமாக சொல்லப்படும். இவற்றை சேகரித்து கொண்டிருக்கின்றோம். அதுவரை பொறுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது பக்தர்கள், சீடர்கள், அன்பர்கள் அனைவரின் பேராதரவிற்கும் இப்படி கடினமான நேரங்களில் தியான பீடத்திற்கு துணை நிற்பதற்காகவும் எனக்கு துணை செய்வதற்காகவும் மிகுந்த நன்றியோடு வணங்குகிறேன். சில நாட்களில் நாங்கள் செய்திகள் அனைத்தையும் சேகரித்த பிறகு உங்கள் முன்பு எல்லா உண்மைகளையும் திறந்து வைக்கிறேன். நன்றி.
இவ்வாறு நித்யானந்தா சாமியார் பேசியுள்ளார்.
மகளிர் தினமான இன்று பெண்கள் மூலம் விமானங்களை இயக்க ஏர்-இந்தியா திட்டம்
சர்வதேச மகளிர் தினமான இன்று, நான்கு சர்வதேச விமானங்களையும், மூன்று உள்நாட்டு விமானங்களையும் முழுக்க முழுக்கப் பெண்கள் மூலமாகவே ஏர்-இந்தியா இயக்குகிறது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மும்பையிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் விமானம் உட்பட பல விமானங்களை, பெண்கள் மூலம் இயக்கப் போவதாக ஏர்-இந்தியா விமான நிறுவனம் அறிவித்திருந்தது. அதன் படி, இன்று, மும்பையிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் விமானம் உட்பட நான்கு சர்வதேச விமானங்கள் மற்றும் மூன்று உள்நாட்டு விமானங்கள், பெண்களாலேயே இயக்கப்படும். இந்த விமானங்களில் பைலட்கள் அனைவரும் பெண்கள். பணிப் பெண்கள் மற்றும் பிற அதிகாரிகள், உதவியாளர்கள், கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்குபவர்கள் என அனைவரும் பெண்களாகவே இருப்பர். கேப்டன் சுமிதா நவுரலா கூறுகையில், 'இது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்கு முன்பு நான் பல முறை விமானங்களைச் செலுத்தியிருக்கிறேன் என்றாலும், இப்போது என் சக பைலட்கள் அனைவரும் பெண்களாக இருக்கின்றனர் என்பது தான் வரவேற்புக்குரியது' என்றார்.
குருஜியுடன் ரகசிய இடத்தில் இருப்பதாக தகவல்
நித்யானந்தா முன் ஜாமீன் பெற முயற்சி
உரிய சட்ட பாதுகாப்போடுதான் வெளியே வருவார் என்று வக்கீல் பேட்டி
"செக்ஸ்'' புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தா சுவாமிகள் கோர்ட்டில் முன் ஜாமீன் பெற முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் உரிய சட்ட பாதுகாப்போடுதான் வெளியே வருவார் என்று அவரது வக்கீல் தெரிவித்தார்.
நடிகை ரஞ்சிதாவோடு இணைத்து செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ள சுவாமி நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் என்ற தர்மானந்தா கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன் தினம் 2-வதாக ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். முதலில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தனர். 2-வதாக பதிவு செய்த வழக்கில் கற்பழிப்பு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் நித்யானந்தா மீது குற்றம் சுமத்தி உள்ளனர்.
இதே போல கோவை போலீசாரும் சாமியார் நித்யானந்தா மீது ஒரு மோசடி வழக்கை தனியாக பதிவு செய்துள்ளனர். மோசடி வழக்கை தவிர்த்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நித்யானந்தா மீது பதிவு செய்துள்ள கற்பழிப்பு வழக்கு, கர்நாடக மாநில போலீசாருக்கு மாற்றப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் அறிவித்துள்ளார். திங்கள்கிழமை (இன்று) அல்லது செவ்வாய்கிழமை அன்று கற்பழிப்பு வழக்கு விவரங்கள் கர்நாடக போலீசாருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று மாலையில், நித்யானந்தா சுவாமி தோன்றி பேசிய வீடியோ காட்சி அடங்கிய கேசட் ஒன்றை அவரது வக்கீல் ஸ்ரீதர் வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் கோர்ட்டுக்கு தெரிவிக்கவில்லை. கோர்ட்டுக்கு தெரிவித்தவுடன் முன் ஜாமீன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். நித்யானந்தா எங்கிருந்து வீடியோ காட்சி கேசட்டை அனுப்பி வைத்தார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரை கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அவர் உரிய சட்டபாதுகாப்புகளோடுதான் இனி வெளியே வருவார்.
அவர் கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. அவர் கடைசியாக வாரனாசியில் கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். அவர் தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது பேச்சு அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் பாபாஜி என்ற தன்னுடைய குருஜியுடன்தான் இருக்கிறார்.
தற்போது புகார் கொடுத்துள்ள லெனின் சேலம் ஆத்தூரிலிருந்து, சென்னைக்கு வந்து புகார் கொடுத்துள்ளார். ஆனால் அவர் புகார் கொடுக்க வேண்டிய இடம் கர்நாடக மாநில போலீசாகும். முதலில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக சென்னை போலீசார் கூறினார்கள். இப்போது பாதிக்கப்பட்ட பெண் யாரும் புகார் கொடுக்காமல் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. நாங்கள் அதை சட்டரீதியாக சந்திப்போம். போலீசார் போட்ட வழக்கில் பல்வேறு பின்னணி உள்ளது என்பது மட்டும் இப்போது தெளிவாக தெரிகிறது. விரைவில் அவை வெளிச்சத்துக்கு வரும்.
இவ்வாறு வக்கீல் ஸ்ரீதர் தெரிவித்தார்.
கல்லூரி விரிவுரையாளர்கள் இன்று முதல் "ஸ்டிரைக்"
பணி நிரந்தரம் செய்யக் கோரி, அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அரசு கல்லூரிகள் 67ல், சுயநிதி பாடப்பிரிவுகள் உள்ள 51 கல்லூரிகளில், தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்களை அரசு நியமித்தது. 2003-04ம் ஆண்டில் 1,056 பேர் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு மாதந்தோறும் தலா 4,000 ரூபாய் வழங்கியது. இதைத் தொடர்ந்து தொகுப்பூதியம் 6,000 ஆக உயர்ந்தது.
தொகுப்பூதிய அடிப்படையில், காலை, மதியம் இரண்டு 'ஷிப்டு'களில் விரிவுரையாளர்கள் பணியாற்றினர். இவர்கள், ஏழு ஆண்டுகளாக தொகுப்பூதிய அடிப்படையிலேயே பணியாற்றுவதாகவும், பணி நிரந்தரம் செய்யக்கோரி உயர்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, தேர்தல் அறிக்கையில், அரசு கல்லூரிகளில் சுயநிதி பாடம், பொது பாடமாக்கப்படும். கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர் என, அரசு உறுதியளித்தது. இதில், அரசு கல்லூரிகளில், 264 சுயநிதி பாடப்பிரிவுகளை மட்டுமே பொது பாடப்பிரிவாக மாற்றியது. விரிவுரையாளர்கள், நிரந்தரப்படுத்தவில்லை. இதனால், தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கையாகி போனதென விரிவுரையாளர்கள் புலம்புகின்றனர்.
பணிநிரந்தர பிரச்னை ஒரு புறம் இருக்க, நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரியில் இவர்களுக்கு சம்பளமும் வழங்கவில்லை. பணி நிரந்தர கோரிக்கை: இதற்கிடையில் அரசு, 998 உதவி பேராசிரியர்களை நியமிக்க உள்ளது. அவர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில், கவுரவ விரிவுரையாளர்களின் பணி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. எனவே, கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி, இன்று முதல் விரிவுரையாளர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
