South Indian Crime Point as your Homepage
ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசிய கொடி ஏற்றினார்
புதுடெல்லி, ஜன.27- டெல்லியில், குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். ராணுவ பலத்தை பறைசாற்றும் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமர் அஞ்சலி குடியரசு தின விழா, நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில், குடியரசு தின விழாவின் தொடக்கமாக, இந்தியா கேட்டில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மன்மோகன் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மற்றும் முப்படை தளபதிகளும் மலரஞ்சலி செலுத்தினர். பின்னர், ராஜபாதையில், 21 குண்டுகள் முழங்க ஜனாதிபதி பிரதீபா பட்டீல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தி, தானும் உயிரிழந்த ராணுவ அதிகாரி நவ்தீப் சிங்கின் வீரச் செயலை பாராட்டி ஜனாதிபதி பிரதீபா பட்டீல் `அசோக் சக்ரா' விருதை வழங்கினார். விருதை, நவ்தீப் சிங்கின் தந்தை ஜோகிந்தர் சிங் பெற்றுக் கொண்டார். பின்னர், மி-17 ரக விமானங்கள், வானில் பறந்து வந்து, பார்வையாளர்கள் மீது மலர் இதழ்களை மழையாக பொழிந்தன. அணிவகுப்பு அதைத் தொடர்ந்து, 8 கி.மீ. நீள ராஜபாதையில் குடியரசு தின அணிவகுப்பு தொடங்கியது. இந்த அணிவகுப்புக்கு டெல்லி ராணுவ கமாண்டிங் அதிகாரி வி.கே.பிள்ளை தலைமை தாங்கினார். ஜனாதிபதி பிரதீபா பட்டீல், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். ராணுவத்தின் பலத்தையும், இந்தியாவின் கலாச்சார பெருமையையும் பறைசாற்றும்விதத்தில் அணிவகுப்பு நடைபெற்றது. முப்படைகளும் இதில் பங்கேற்றன. துணை ஜனாதிபதி அமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அணிவகுப்பை பார்வையிட்டனர். காலை நேர பனியையும் பொருட்படுத்தாமல், ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அலங்கார ஊர்திகள் இந்த அணிவகுப்பில், 13 மாநிலங்கள் மற்றும் 10 மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தது, பார்வையாளர்களை கவர்ந்தது. விமானப்படை அலங்கார ஊர்தியில், சமீபத்தில் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட அக்னி-4 ஏவுகணை இடம் பெற்றது. இது, அணு ஆயுதங்களை ஏந்திச்சென்று, 3 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது. மேலும், 150 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல `பிரகார்' ஏவுகணை, ஆளில்லாத விமானம் `ரஸ்டம்-1', சமீபத்தில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ஹெர்குலஸ் விமானம் ஆகியவையும் அணிவகுப்பில் இடம்பெற்றன. ஒவ்வொரு மாநிலத்தின் அலங்கார ஊர்தியிலும் அம்மாநிலத்தின் பெருமையையும், கலாச்சாரத்தையும் உணர்த்தும் வகையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. அணிவகுப்பின் நிறைவில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த 32 விமானங்கள் அடுத்தடுத்து வானில் பறந்து வந்து பார்வையாளர்களை வியக்க வைத்தன. வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. குறிபார்த்து சுடும் வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பையொட்டி, டெல்லி மாநகர் முழுவதும் பாதுகாப்பு கோட்டையாக மாறி இருந்தது. நகருக்குள் நுழைபவர்களை சோதனைக்கு பின்னரே போலீசார் அனுமதித்தனர். விமான நிலையம், ரெயில் நிலையங்கள், மெட்ரோ ரெயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். அணிவகுப்பு பாதை நெடுகிலும், உயரமான கட்டிடங்களில், குறிபார்த்து சுடும் வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அணிவகுப்பு பாதையில், ஆங்காங்கே 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. நடமாடும் தாக்குதல் படைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. அணிவகுப்பு பாதைக்கு மேலே விமானப்படை ஹெலிகாப்டர்கள் பறந்தபடி கண்காணித்துக் கொண்டிருந்தன. அணிவகுப்பு நடைபெற்ற ஒரு மணி நேரம் முழுவதும் டெல்லி வான்பகுதி மூடப்பட்டிருந்தது. |
ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் கவர்னர் அறிவிப்பு
தமிழக அமைச்சரவையில் இருந்து அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டனர். புதிய அமைச்சர்களாக என்.ஆர்.சிவபதி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்- அமைச்சர் ஜெயலலிதா பரிந்துரை யின்பேரில், கவர்னர் ரோசய்யா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார் சென்னை, ஜன.27- முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். 2 அமைச்சர்கள் நீக்கம் அவரது ஆலோசனையின் பேரில் 2 அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிதாக 2 அமைச்சர்களை நியமிக்க கவர்னர் ரோசய்யா ஒப்புதல் வழங்கி உள்ளார். இது தொடர்பாக, கவர்னர் மாளிகை நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். புதிய அமைச்சர்கள் நியமனம் முசிறி தொகுதி எம்.எல்.ஏ.யான என்.ஆர்.சிவபதி பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு பள்ளிக்கல்வி, தொல்லியல், விளையாட்டு, இளைஞர் நலன், தமிழ் ஆட்சி மொழி மற்றும் கலாசாரம் ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்படுகின்றன. செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ.யான என்.சுப்பிரமணியன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார். அவருக்கு, தகவல் தொழில்நுட்ப இலாகா ஒதுக்கப்படுகிறது. செங்கோட்டையன் இலாகா மாற்றம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வருவாய்த்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். அவருக்கு வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை கலெக்டர்கள், எடை மற்றும் அளவு, கடன் சட்டங்கள் மற்றும் நிவாரணம், சிட்பண்ட், கம்பெனிகள் பதிவு ஆகிய இலாகாக்கள் ஒதுக்கப்படுகின்றன. புதிய அமைச்சர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 5-வது முறை கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. அரசு அமைந்தது. முதல் முறையாக கடந்த ஆண்டு ஜுன் மாதம் 27-ந் தேதி தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகமது ஜான் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு 2-வது முறையாக கடந்த ஆண்டு ஜுலை 3-ந் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.ஏ. செந்தூர் பாண்டியன் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து 3-வது முறையாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அமைச்சர்களாக இருந்த சண்முகவேலு, உதயகுமார், சிவபதி, சண்முகநாதன், செந்தமிழன், புத்திசந்திரன் ஆகிய 6 பேர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். தாமோதரன், காமராஜ், டாக்டர் சுந்தர்ராஜ், பரஞ்சோதி, மூர்த்தி, ராஜேந்திரபாலாஜி ஆகிய 6 பேர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். 18-ந் தேதி பின்னர், 4-வது முறையாக அமைச்சரவை கடந்த மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. 34 நாட்களே அமைச்சர் பதவியில் இருந்த பரஞ்சோதி, செல்வி ராமஜெயம் ஆகியோர் நீக்கப்பட்டு, புதிதாக பா.வளர்மதி, எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆகியோர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். தற்போது 5-வது முறையாக நடைபெற்றுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி ஆகியோர் நீக்கப்பட்டு முக்கூர் சுப்பிரமணியன், என்.ஆர்.சிவபதி ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இருந்த தகவல் தொழில்நுட்ப இலாகா என்.ஆர்.சுப்பிரமணியனுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.வேலுமணியிடம் இருந்த வருவாய்த்துறை கே.ஏ.செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது நீக்கப்பட்டுள்ள அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேலுமணி ஆகியோரின் இலாகாக்கள், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக 18-ந் தேதிதான் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். என்.ஆர்.சிவபதி தமிழக புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சிவபதி 1963-ல் பிறந்தவர். இவர் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார். 1991-ல் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தி.மு.க. வேட்பாளர் கண்ணையனை சுமார் 80 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். கட்சியில் மாவட்ட ஜெ., பேரவை செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர் - இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார். இவரது தந்தை பெயர் ரங்கராஜன், தாயார் சரோஜா. இவருக்கு சாந்தி என்ற மனைவியும், சிவசங்கரி, லட்சுமிபிரியா என்ற இரு மகள்களும் உள்ளனர். முக்கூர் என்.சுப்பிரமணியன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முக்கூர் என்.சுப்பிரமணியன் (வயது 52). இவர் முக்கூர் அ.தி.மு.க. கிளை கழக செயலாளராக கட்சி பதவி தொடங்கி செய்யாறு ஒன்றிய துணைச் செயலாளர், ஒன்றிய செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஆகிய கட்சி பதவிகள் வகித்து வந்துள்ளார். செய்யாறு ஊராட்சி ஒன்றியகுழு தலைவராக 2001 - 2006 வரை பதவி வகித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் செய்யாறு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு முக்கூர் என்.சுப்பிரமணியன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை விட 25,463 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவரது மனைவி விஜய சாமுண்டீஸ்வரி, மகள் விமலா, மகன் செந்தில்நாதன். மகன் பல் டாக்டராக உள்ளார். |
