Welcome to South Indian Crime Point
டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அண்மை செய்திகள்
சந்திரசேகர ராவ் உண்ணாவிரதம் வாபஸ்
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மத்திய அரசு நேற்றிரவு அறிவித்தது. இதையடுத்து தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி 11 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார்.
விபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது:சுப்ரீம் கோர்ட்
விபசாரத்தை தடுக்க முடியவில்லை என்றால் அதை ஏன் சட்டபூர்வமாக்க கூடாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக பச்பன் பச்சோ ஆந்தோலன் என்ற என்.ஜி.ஓ. அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தது.
நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே.பட்நாயக் அடங்கிய பெஞ்ச் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம், "உலகின் பழமையான தொழிலான விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை என்றார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விபசாரத்தை சட்டப்படி தடுக்க முடியவில்லை என்றால், அதை ஏன் மத்திய அரசு சட்டமாக்க கூடாது. ஏதோ ஒரு வழியில் விபசாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் விபசாரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை. இத்தொழிலில் சிலர் நவீன முறையில் ஈடுபட்டுள்ளனர். அதை கண்டுபிடிக்க முடியாது.
அதனால் விபசாரத்தை மத்திய அரசு ஏன் சட்டபூர்வமாக்க கூடாது? விபசாரத்தை சட்டபூர்வமாக அனுமதித்தால், அந்த தொழிலை கண்காணிக்க முடியும். அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மறுவாழ்வு, மருத்துவ உதவிகள் அளிக்க முடியும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த அரசு வக்கீல், "இந்த விவகாரம் பற்றி ஆலோசனை செய்து முடிவை தெரிவிக்கிறோம்" என்றார்.
இன்றைய செய்திப் புகைப்படங்கள்






தனி தெலுங்கானா கோரிக்கை ஏற்பு: மத்திய அரசு அறிவிப்பு
தனி தெலுங்கானா போராட்டம் தீவிரம் அடைந்தததால், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் நேற்று இரவு இரண்டு முறை முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், பிரதமர் மன்மோகன்சிங், ஆந்திர முதல்-மந்திரி ரேசாய்யாவுடன் நடத்திய ஆலோசனைக்குப்பிறகு, தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான முயற்சிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும், அது தொடர்பாக ஆந்திர மாநில சட்டசபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் அறிவித்தார்.
நோபல் பரிசு பெற நார்வே சென்றார் ஒபாமா
நோபல் பரிசு பெறுவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா நார்வே தலைநகர் ஆஸ்லோ சென்றுள்ளார். இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லிம் நாடுகள் உள்பட உலக நாடுகளை ஒருங்கிணைத்து அணு ஆயுத பரவல் தடையை ஊக்குவித்து அமைதி சூழ்நிலையை உருவாக்கியதற்காக ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு அறிவித்தது. விருதை பெற நார்வேக்கு ஒபாமா சென்றுள்ளார். ஆஸ்லோவில் விருது விழாவுக்கான ஏற்பாடுகள் பிரமாண்ட முறையில் செய்யப்பட்டுள்ளன. விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக நார்வே அரசு ரூ.80 கோடி ஒதுக்கியிருக்கிறது.






டெஸ்ட் தரவரிசையில் ஷேவாக் 5-வது இடத்துக்கு முன்னேற்றம்
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 293 ரன்களை குவித்ததன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 14 இடங்கள் முன்னேறி ஷேவாக் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 804 புள்ளிகளுடன் பாகிஸ்தான் கேப்டன் முகமது ïசுப்புடன் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 2006-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஷேவாக் முதல் முறையாக முதல் 5 இடங்களுக்குள் முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. காம்பீர் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இலங்கை வீரர்கள் சங்கக்கரா, ஜெயவர்த்தனே, ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் ஆகியோர் முறையே 2-வது, 3-வது மற்றும் 4-வது இடத்தில் உள்ளனர். இதற்கிடையே 2002-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.