Welcome to South Indian Crime Point
இன்றைய (25-01-2010) அண்மை செய்திகள்
வரலாறு காணாத கெடுபிடியுடன் தயாராகிறது டில்லி: குடியரசு நன்னாள் பாதுகாப்பு தீவிரம்
குடியரசு தினத்தையொட்டி, டில்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கமான போலீஸ் பாதுகாப்போடு, கூடுதலாக 192 கம்பெனி பாதுகாப்புப் படையினரும், கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.நாடு முழுவதும், நாளை 61 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டில்லியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார். குடியரசு தின கொண்டாட்டங்களை சீர்குலைக்க, பயங்கரவாதிகள் சதி செய்யலாம் என, மேலை நாட்டு உளவு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, டில்லியில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையெங்கும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக "பாராகிளைடர் ' மூலம், பறந்து வந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தி, மேலும் கெடுபிடி அதிகரிக்க காரணமாகும்.
பலஅடுக்கு பாதுகாப்பில் உயரமான கட்டடங்கள் மீதிருந்தபடி, அதிரடிப்படை வீரர்கள் துப்பாக்கி சகிதமாக காவல் காப்பார்கள்.
இந்நிலையில், குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, டில்லி போலீஸ் சிறப்பு ஆணையர் அஜய் சத்தா நிருபர்களிடம் கூறியதாவது:
வழக்கமான போலீஸ் பாதுகாப்போடு, கூடுதலாக 192 கம்பெனி பாதுகாப்புப் படையினர், குடியரசு தின விழா பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். இவர்களில் 52 கம்பெனியினர் துணை ராணுவப் படையினர். குடியரசு தின அணிவகுப்பு செல்லும் பாதையில், அன்று காலை முதல் இவர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவர். இன்று இரவு 11 மணி முதல் நாளை மதியம் 1.30 மணி வரை, டில்லி நகர எல்லைகள் "சீல்' வைக்கப்படும். நகருக்குள் நுழையும் வாகனங்கள் பலத்த சோதனைக்குப் பிறகே அனுப்பப்படும்.
மெட்ரோ ரயில் சேவையில் இன்று எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், நாளை பகல் 12 மணி வரை கட்டுப்பாடு இருக்கும். ராஜிவ் சவுக் மற்றும் பாரகம்பா சாலை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். சந்தேகத்திற்குரிய நபர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளும் முழு வீச்சில் உள்ளன.குடியரசு தின அணிவகுப்பு முடியும் வரை, அது செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. மொத்தத்தில் எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காமல் இருக்கத் தேவையான அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அஜய்சத்தா கூறினார்.
இதேபோல், நாட்டின் மற்ற பகுதிகளிலும், குடியரசு தின விழா கொண்டாட்டங்களின் போது, அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் தடுப்பதற்காக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது ஒத்திகைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நகர எல்லையில் வாகனங்கள் தீவிரமாக பரிசேதிக்கப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் முழு உஷார் நிலையில் உள்ளனர்.
இந்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள், வரும் 31ம் தேதி வரை தொடரும் என்றும், போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் விமான நிலையம் மற்றும் முக்கிய இடங்களை பாதுகாக்க, அதிக அளவில் போலீசார் ஈடுபடுத்தப் படுகின்றனர்.





உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
கோவையில் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அனைத்து கட்டமைப்பு பணிகளையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர், அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் ரெசிடென்சி ஓட்டலுக்கு வந்தார்.
அங்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஊரக தொழில்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் உமாநாத், மாநகராட்சி ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா, மேயர் வெங்கடாசலம், போலீஸ் கமிஷனர் சிவனாண்டி, புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக ஒவ்வொரு துறை சார்பில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். மாநாட்டையொட்டி நடைபெற்றுவரும் சாலைப்பணிகள் முன்னேற்றம் எந்த அளவில் உள்ளது? என்று அவர் கேட்டதற்கு, அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:-
கோவை நகரில் ரூ.60 கோடியில் 96 கிலோ மீட்டர் தொலைவுக்கு 17 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளது. அதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது. திருச்சி சாலை அகலப்படுத்தும் பணியும் விரைவுபடுத்தப்பட்டு பணிகள் துரிதவேகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் மாநாடு நடைபெறும்போது வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், இதர வாகனங்களை மாவட்ட எல்லையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து வருகிறோம்.
மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்க பணிகள் தொடங்குவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கூட்டம் வருகிற 5-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. அதில் மாநாட்டின் சிறப்பை எடுத்துக்கூறி மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்தும் பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதையடுத்து அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியிடம், "கோவை சிறைச்சாலை வளாகத்தில் தாவரவியல் எப்போது தொடங்கப் போகிறீர்கள்? சிறைச்சாலைக்கு வேறு இடம் எங்கு தேர்வு செய்து உள்ளீர்கள்? என்று மு.க.ஸ்டாலின் கேட்டார். அதற்கு கலெக்டர் உமாநாத் பதில் அளித்தபோது, `சிறைச்சாலை வளாகத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு 50 ஏக்கர் நிலம் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். மேலும், சிறைச்சாலை வளாகத்தில் கட்டிடங்கள் உள்ளன. அந்த கட்டிடங்களை இடிப்பது தொடர்பாக அரசுக்கு தெரிவித்து, இதர நிலங்களும் இந்த பூங்காவில் சேர்க்கப்படும். சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு குறைந்தது 100 ஏக்கர் நிலம் தேவைப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்' என்றார்.
உடனே மு.க.ஸ்டாலின், "சிறைச்சாலைக்கு மாற்று இடத்தை உடனே தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் முழு அளவிலான தாவரவியல் பூங்கா கோவை மாநகர மக்களுக்கு கிடைக்கும்' என்று உத்தரவிட்டார்.
அதற்கு கலெக்டர், "சிறைச்சாலைக்கு மாற்று இடத்தை தேர்வு செய்து தங்களுக்கு தெரிவிக்கிறோம்' என்றார்.
அதையடுத்து துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், `மாநாட்டையொட்டி தண்ணீர் அதிக அளவில் தேவைப்படும். வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம் எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?' என்று கேட்கவே, அதற்கு கலெக்டர், `வடவள்ளி, கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் 85 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளன. நெல்லித்துறையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செல்லப்பனூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த பணிகள் மார்ச் 31-ந் தேதிக்குள் முடிந்துவிடும்' என்றார்.
மாநாட்டையொட்டி கோவையில் நடைபெறும் அனைத்து பணிகளையும் மாநாடு நடைபெறும் ஒரு மாதத்துக்கு முன்னதாக முடிக்க வேண்டும் என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கோவை மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளில் இருந்து பிறகட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா போத்தனூர் பி.வி.ஜி. கல்யாண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழக துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதியம் 121/2 மணியளவில் மண்டபத்துக்கு வந்தார்.
விழாவில் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கியும், அவர்களை கட்சியில் சேர்க்க பணியாற்றிய தி.மு.க. நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தும் கவுரவித்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
கோவை மாவட்டம் மற்றும் மாநகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க., தே.மு.தி.க, ம.தி.மு.க, புதிய தமிழகம், கொ.மு.க., சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் 8 ஆயிரத்து 97 பேர் அந்தந்த கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையும் சிறப்பான விழா இங்கு நடக்கிறது. இந்த விழா கட்சியில் சேரும் விழாவா? அல்லது நம் இயக்கத்தின் மாநாடா? என்று கேட்கும் அளவுக்கு உள்ளது.
நாட்டில் எத்தனையோ கட்சிகள் உள்ளன. அந்த கட்சி தலைவர்கள் தேர்தல் நேரத்தில் உங்களை சந்தித்து நாங்கள் ஆட்சிக்கு வருவோம், நாங்கள் முதல்-அமைச்சர் ஆவோம் என்றெல்லாம் சொல்வதுண்டு. நாங்கள் இருக்கும் கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்று சொன்ன தலைவர்கள் கூட இன்று அனாதையாக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் தி.மு.க. என்பது ஆட்சிக்காக தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. நாட்டு மக்களுக்காக, ஏழை, எளியோருக்காக, தமிழினத்துக்காக என்று அறைகூவல் விடுத்து உருவாக்கப்பட்ட இயக்கம்.
1949-ல் சென்னை ராபின்சன் பூங்காவில் தி.மு.க.வை அண்ணா தொடங்கினார். அந்த சமயத்தில்கூட ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அவர் தொடங்கவில்லை. பல ஆண்டுகளுக்கு பிறகு 1957-ல்தான் தி.மு.க. முதல்முறையாக தேர்தல் களத்தில் நின்றது. அதைக்கூட அண்ணா தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கவில்லை. கட்சி முன்னோடிகளை கேட்டு முடிவு எடுக்கவில்லை. தி.மு.க. மாநாட்டில் பங்கேற்ற மக்களிடம் கேட்டு அவர்களுடைய கருத்தின் பெரும்பான்மை அடிப்படையில்தான் முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டபோது 15 இடம் கிடைத்தது.
2006-ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றிபெற்று 5-வது முறையாக கலைஞர் ஆட்சிப்பொறுப்பு ஏற்றார். இதுபோன்ற வரலாறு தி.மு.கவை தவிர, கலைஞரை தவிர வேறு யாருக்கும், எந்த கட்சிக்கும் இருந்ததில்லை. அப்படிப்பட்ட மாபெரும் இயக்கமாக தி.மு.க. வளர்ந்து உள்ளது. அதில் உங்களை இணைத்துக்கொண்டதற்கு கழக பொருளாளர் என்ற அடிப்படையிலும், கலைஞர் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்கிறேன். கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டு கலைஞர் கரத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.





தேசிய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு:டிரைவிங் லைசென்சுக்கு மொழி அவசியமா?
"மராத்தி மொழியில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிய வேண்டும். மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இந்த தகுதியிருப்பவர்களுக்கு மட்டுமே, இனி மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா நகரங்களில் வாடகை டாக்சி ஓட்டுவதற்கான லைசென்ஸ் தரப்படும்'என, சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதைப் படித்த அடுத்த வினாடியே, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தான் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பார் என, நீங்கள் நினைத் தால், ஏமாந்து விடுவீர்கள். சிவசேனா தலைவர் பால் தாக்கரே கூறியிருப்பார் என, அடுத்த சாய்சை தேர்வு செய்தால், இரண்டாவது முறையாகவும் ஏமாந்து போய் விடுவீர்கள். அப்படியானால், தேசிய ஒருமைப் பாட்டுக்கு வேட்டு வைக்கும் வகையிலான இப்படி ஒரு வில்லங்கமான அறிவிப்பை யார் வெளியிட்டிருப்பார் என, ஆச்சர்யம் மேலிட, நீங்கள் குழம்புவது தெரிகிறது.தேசிய கட்சியான காங்கிரஸ் தலைமையில் அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில அரசு தான், இப்படி ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு, தேசிய ஒருமைப்பாட்டை நேசிக்கும் அனைவரையும் கலங்கடித்துள்ளது. நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கிறது.
மகாராஷ்டிராவில் டாக்சி ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிலும், பீகார், உ.பி., உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். இதில் தமிழர்களும் கணிசமான அளவில் உள்ளனர். மும்பையில் மட்டும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கான தனியார் வாடகை டாக்சிகள் ஓடுகின்றன. இவர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டாலும், நகரம் ஸ்தம்பித்து விடும். அந்த அளவுக்கு டாக்சி டிரைவர்களுக்கு செல்வாக்கு உண்டு.மும்பையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்சி டிரைவர்கள் ஆதிக்கம் செலுத்துவது, சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா போன்ற கட்சியினருக்கு கடும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது நிஜம். இதனால் தான், தங்களுக்கு பொழுது போகாத போதெல்லாம், ராஜ் தாக்கரே வகையறாக்கள், வட மாநில டாக்சி டிரைவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துவது வழக்கம்.
இதுபோன்ற அடாவடிகளை ராஜ் தாக்கரே செய்து வந்தாலும், தேசிய அளவில் இதை யாரும் ஒரு பெரிய பிரச்னையாக பொருட்படுத்தவில்லை. ஆனால், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், டாக்சி டிரைவர் விவகாரம், நீண்ட நாட்களாகவே கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, தேசிய பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள அரசு, இப்படி ஒரு தடாலடி அறிவிப்பை வெளியிட்டுள் ளது, நாட்டு மக்களின் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது.மும்பை உள்ளிட்ட மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள வட மாநில டாக்சி டிரைவர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். அங்கு மண்ணின் மைந்தர்களை அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஒரே சுய நல நோக்கம் தான், இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.
டாக்சி டிரைவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடு, டாக்சி பெர்மிட்டுக்கும் பொருந் தும் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் மட்டும் ஆண்டு தோறும் 4,000 புதிய டாக்சிகளுக்கு பெர்மிட் அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு புதிய பெர்மிட்டுக்கும், வாடகை டாக்சி ஆபரேட்டர்களிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், டாக்சிக்கான பெர்மிட் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா அரசின் விசித்திரமான கட்டுப்பாடுகளுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "மாநில அரசின் இந்த நடவடிக்கை, தேசிய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்' என, அரசியல் கட்சி தலைவர்கள், ஆவேசமாக தெரிவித்தனர். இதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான், இந்த விஷயத்தில் சற்று இறங்கி வந்தார்.
அவர் கூறியதாவது:வாடகை டாக்சி யூனியனை, ஒரு அமைப்பு ரீதியான துறையாக மாற்றுவதற்காகவே, இந்த விஷயத்தில் அரசு, சில கட்டுப்பாடுகளை விதித்தது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. கடந்த 1989ல் உருவாக்கப்பட்ட மகாராஷ்டிரா மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விஷயங்களைத் தான், மீண்டும் கூறியுள்ளோம்.இந்த சட்டத்தில், மாநிலத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் வசிப்பவருக்கும், உள்ளூர் மொழிகளை சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்களுக்கும் மட்டுமே, டாக்சி பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும் என்றும் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதைத் தான், நாங்கள் மீண்டும் கூறியுள்ளோம். உள்ளூர் மொழிகள் என்றால் மராத்தி மட்டுமல்ல. இந்தி, குஜராத்தி மொழிகளில் பேசினால் கூட போதும். அவர்களுக்கும் லைசென்ஸ் வழங்கப்படும்.இவ்வாறு அசோக் சவான் கூறினார்.
மகாராஷ்டிரா முதல்வரின் இந்த பேச்சு, அனைத்து தரப்பினரையும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. போனால் போகிறது என்று குஜராத்தி, இந்தி மொழி பேசுவோரையும் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். அப்படியானால், இந்தியாவில் இந்த மூன்று மொழிகள் தான் உள்ளனவா? தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்டவை எல்லாம் மொழிகள் இல்லையா, என, மற்ற மாநிலத்தவர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.அசோக் சவான் குறிப்பிட்ட மூன்று மொழிகள் தவிர, மற்ற மொழிகள் பேசுவோர் மகாராஷ்டிராவில் டாக்சி ஓட்டக் கூடாதா? டாக்சி ஓட்டுவதற்கு லைசென்ஸ் கொடுப்பதற்கு இந்தியர் என்ற அடையாளமும், அவரின் டிரைவிங் திறமையும் போதாதா? இதில் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழிகள், டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளில் எந்த அளவுகோளில் வருகிறது என தெரியவில்லை. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்றால் எங்கே இருக்கிறது ஒருமைப்பாடு? இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும், புதிய கட்டுப்பாடுகள் விதித்தால் என்ன ஆவது என்பது தான் மற்ற மாநிலத்தவரின் கேள்வியாக உள்ளது.
மகாராஷ்டிராவில் துவக்கத்தில் இருந்தே, நாட்டின் ஒருமைப் பாட்டுக்கு சவால் விடும் நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. ராஜ் தாக்கரே, பால் தாக்கரே போன்றவர்களால் மற்ற மாநிலத்தவருக்கு எதிராக வன்முறை தொடர்ந்து தூண்டி விடப்படுகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில், மராத்தி மொழியில் பதவியேற்க மறுத்த, சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி மீது ராஜ் தாக்கரே கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முதல்வர் அசோக் சவானும் ஒருவர். தற்போது, குறிப் பிட்ட சில மொழிகள் பேசுவோருக்கு மட்டும் தான் இங்கு வேலை என, அறிவித்து இருக்கிறார். இதற்கு காங்கிரஸ் மேலிடம் என்ன பதில் கூறப் போகிறது. முதல்வரின் பேச்சை நியாயப்படுத்தப் போகிறதா? தேசிய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும், இதுபோன்ற அபாயகரமான போக்கை, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரும்புக் கரங்கள் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி செயல்படாமல் மவுனம் காத்தால், நாடு முழுவதும் இதுபோன்ற விபரீதங்கள் அரங்கேறும் அபாயம் ஏற்படும். என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இந்த விஷயத்தில் வழக்கம்போல், தனது தடாலடி கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:இந்தி, குஜராத்தி மொழி பேசுவோருக்கும், மகாராஷ்டிராவில் டாக்சி ஓட்ட லைசென்ஸ் கொடுக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது, துரதிர்ஷ்டவசமானது. இங்கு மராத்தியர்கள் மட்டுமே டாக்சி ஓட்ட முடியும். பிற மாநிலத்தவர் டாக்சி ஓட்டுவதை அனுமதிக்க முடியாது. அதை மண்ணின் மைந்தர்கள் பார்த்துக் கொள்வர். பீகார், உ.பி., மாநிலத்தவர் இங்கு வந்து தங்குவதற்கு மகாராஷ்டிரா மாநிலம் மடம் அல்ல.இவ்வாறு ராஜ் தாக்கரே கூறினார்.
நிதிஷ், சரத் யாதவ் கடும் ஆவேசம் : பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில்,"மகாராஷ்டிரா அரசின் இந்த போக்கு மிகவும் அபாயகரமானது. இதுபோன்ற விபரீதமான நடவடிக்கைகள், உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்' என்றார்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறுகையில்,"டாக்சி டிரைவர்களுக்கு லைசென்ஸ் வழங்கும் விஷயத்தில், மகாராஷ்டிரா அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் முற்றிலும் தேவையற்றவை. பிரதமர் மன்மோகன் சிங், இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்' என்றார்.
மும்பையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் டாக்சி டிரைவர்களாக உள்ளனர். இவர்களுக்கு, இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகள் சரளமாக பேசத் தெரிந்தாலும், எழுத, படிக்க தெரியாது. டாக்சி டிரைவர் தொழிலை நம்பி, பல தமிழ் குடும்பங்கள் அங்கு உள்ளன. அரசு விதித்துள்ள திடீர் கட்டுப்பாடுகளால், அங்குள்ள தமிழர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.புதிதாக வாடகை டாக்சி டிரைவருக்கான லைசென்ஸ் வேண்டுமானால், மராத்தி மொழி தெரிந்திருக்க வேண்டும் என கூறப்படுவதால், இந்த மொழி தெரியாத தமிழர்கள், லைசென்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தை சேர்ந்தவர்கள் அங்கு வாடகை டாக்சி ஓட்டுவது இனி, இயலாத காரியமாகவே இருக்கும். இதனால்,ஆயிரக்கணக்கான தமிழ் டாக்சி டிரைவர்களும், அவர்களை நம்பியுள்ள அவர்களின் குடும்பத்தினருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: ராஜ் தாக்கரேயின் செயல்பாடுகளுக்கும், மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நாட்டு மக்கள் அனைவரும், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை பார்க்கலாம். எனவே, மகாராஷ்டிரா அரசின் இந்த அறிவிப்பு அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அரசின் இந்த நடவடிக்கையால், டாக்சி தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வெளி மாநில தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறினார்.
மகாராஷ்டிரா அரசின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து, மும்பை டாக்சி யூனியன் தலைவர் குவாத்ரோஸ் கூறியதாவது: டாக்சி ஓட்டினால் தான் எங்கள் வீடுகளில் அடுப்பு எரியும். எங்களுக்கு எதிராக, அரசு ஏன் இப்படி ஒரு கட்டுப்பாட்டை விதிக்கிறது என, தெரியவில்லை. உள்நோக்கத்துடன் அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது. மராத்தி மொழி தெரியாது என்பதற்காக, இந்த வயதில் பள்ளிக்கு சென்று அந்த மொழியை கற்றுக் கொள்ளவா முடியும்? இதுகுறித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு குவாத்ரோஸ் கூறினார்.