Welcome to South Indian Crime Point
இன்றைய (26-01-2010) அண்மை செய்திகள்
டில்லியில் குடியரசு தின விழா : ராணுவ பலத்தையும், கலாச்சார பாரம்பரியத்தையும் விளக்கிய அணிவகுப்பு பிரமாண்டமாக நடந்தது
டில்லியில் 61வது குடியரசு தின விழா கோலாகலாம் கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழா கொண்டாட்டங்களை காண பொதுமக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக வந்திருந்தனர். வழக்கமாக கொடியேற்றம் நடந்த பிறகு ஹெலிகாப்டர் மூலம் பார்வையாளர்கள் மீது பூ தூவப்படும். ஆனால் கடும் பனிமூட்டம் காரணமாக இந்த ஆண்டு மலர் தூவும் முறை கடைபிடிக்கப்படவில்லை.
டில்லி இந்திய கேட் பகுதியில் இருக்கும் அமர் ஜவான் நினைவிடத்தில் பிரதமர் மன்மோகன்சிங், முப்படை தளதிகள் உள்ளிட்டோர் நாட்டைக் காக்கும் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. பிரதமர் அமர்ஜவான் இரங்கல் குறிப்பில் கையெழுத்திட்டார்.
இன்றைய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக தென் கொரிய அதிபர் லி முய்ங் பாக் இந்தியா வந்திருந்தார். விழாவில் பங்கேற்க இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுடன் வந்த தென் கொரிய அதிபர் லீ முய்ங் பக்கை பிரதமர் மன்மோகன் சிங் கைகுலுக்கி வரவேற்றார்.
குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரும், ஜனாதிபதியும் மேடைக்கு வந்ததும் தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. 21 குண்டுகள் முழுங்க மிரயாதை செலுத்தப்பட்டது. பின்னர் வீரதீர செயல்கள் புரிந்த வீரர்களுக்கு அசோக சக்ரா விருதுகளை ஜனாதிபதி வழங்கினார்.
வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட பிறகு ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு நடந்தது. ராணுவ அணிவகுப்பை லெப்டினன்ட் ஜெனரல் கன்வால் ஜீத் சிங் ஓபராய் தொடங்கி வைத்தார். விஜய் சவுக் பகுதியில் தொடங்கி 8 கி.மீ., தூரத்துக்கு முப்படையினரும் பிரமாண்டமாக அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மறியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை பராக்கிரமாங்கள் அணிவகுப்புக்குப் பிறகு பல்வேறு படை பிரிவு வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்கள் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார்.
இந்திய கடற்படை அணிவகுப்பில், ஐ.என்.ஷிவாலிக் போர் கப்பல் கம்பீரமாக அணிவகுத்து டப்தது. ஐ.என்.எஸ்., ஷிவாலிக் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.
இந்தியாவின் கலாச்சாரத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்திய மாநிலங்களின் சிறப்பு அம்சங்களை எடுத்துரைக்கும் அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. முதலில் வடகிழக்கு மாநிலங்களில் அலங்கார ஊர்திகள் வந்தன. அவற்றை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில அலங்கார ஊர்தி வந்த போது, விழாவை காண வந்திருந்த அம்மாநில முன்னாள் மதல்வர் பரூக் அப்துல்லா அலங்கார ஊர்தியை நோக்கி கையசைத்து மகிழ்ச்சியை தெரிவித்தார். 21 மாநிலங்களின் கலாரச்சாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இது தவிர பள்ளி குழுந்தைகளின் கண்கவர் நடன நிகழ்ச்சிகளும் நடந்தது.





சென்னையில் குடியரசு தின விழா கோலாகலம் - கவர்னர் கொடியேற்ற அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு
சென்னை கடற்கரை சாலையில் குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது. கவர்னர் பர்னாலா, முதல்வர் மு.கருணாநிதி ஆகியோர் காலை 07:55 மணி அளவில் விழா மேடைக்கு வந்தனர். சரியாக 8 மணிக்கு தேசியக் கொடியை கவர்னர் ஏற்றி வைத்தார். முப்படை வீரர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அரசின் சாதனைகளை விளக்கும் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்து வந்தன. சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்திய கலாச்சாரத்தை பறைசாற்றும் நடன, நாட்டியங்களை வண்ணமிகு உடையணிந்து நிகழ்த்திக் காட்டினர். கலை நிகழ்ச்சியை தொடர்ந்து அரசின் சாதனைகளை எடுத்துக்கூறும் அலங்கார அணிவகுப்பு நடந்தது. முதலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அலங்கார வாகனம் அசைந்தாடி வந்தது.
அடுத்ததாக ஊரகவளர்ச்சித் துறை வாகனம். அதில் தமிழகத்தில் ஊராட்சித் துறை எட்டியுள்ள சாதனைகளை விளக்கும் விதமாக பல்வேறு காட்சிகள் இடம்பெற்றன. உர ஆலை துறை ஊர்தி, தமிழ்நாடு சுற்றுலாத்துறை கண்டுள்ள மேதகு வளர்ச்சியை விளக்கும் சுற்றுலாத்துறை ஊர்தி, தொழில் துறை சாதனைகளை விளக்கும் ஊர்திகளில் முதலில் வந்தது மின்சார வாரியத்தின் ஊர்தி. இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். விவசாயத்துறை ஊர்தி தமிழக அரசு விவசாயிகளுக்கு அளித்துள்ள சலுகைகளை விளக்கியபடி அணிவகுத்தது.
காவல்துறை ஊர்தியில் இருந்த காவலர்கள் மேடையில் இருந்த தலைவர்களுக்கு சல்யூட் அடித்தபடி சென்றனர். தோட்டக்கலைத் துறை, மீன்வளத்துறை, பால் வளத்துறை மற்றும் கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் வெற்றியை எடுத்துக்கூறும் விதமாக கம்பீரமாக வந்தது குடும்ப நலத்துறை ஊர்தி. அலங்கார ஊர்தி அணிவகுப்பை கவர்னரும், முதல்வரும் கண்டு ரசித்தனர். பின்னர் தேசியப் பாடல் இசைக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது. குடியரசு தின விழா மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக வண்ணமிகு பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன.





பத்மவிபூஷண் விருதுக்கு தேர்வு பெற்றவர்கள்
1. நோபல் பரிசு விஞ்ஞானி வெங்கட்ராமன்
2. அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி
3. மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன்
இளையராஜா, ரகுமானுக்கு பத்மபூஷண் விருது
தமிழகத்தை சேர்ந்த 13 பேர் விருது பெறுகிறார்கள்
தமிழ்நாட்டை சேர்ந்த 13 பேருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் கிடைத்துள்ளன.
மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், கலை, இலக்கியம், கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், தொழில் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்து எடுத்து "பத்ம விபூஷண்', "பத்ம பூஷண்', "பத்மஸ்ரீ' ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
அதன்படி இந்த ஆண்டில் 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 43 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 81 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த 130 பேர்களில் 13 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 3 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்து இருக்கிறது.
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணன், சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியின் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, பிரபல மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கும் மற்றும் நாடகத்துறையை சேர்ந்த இப்ராகிம் அல்காசி, சோரா செகல், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் ஒய்.வேணுகோபால் ரெட்டி ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது.
பத்ம விபூஷண் விருது பெற்றுள்ள 6 பேர்களில் 3 பேர் தமிழர்கள் ஆவார்கள்.
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி நாராயணன் வகுல் ஆகிய 3 பேர் உள்பட 43 பேருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
பிரபல இந்தி நடிகர் அமீர்கான், முன்னாள் மத்திய மந்திரி பாபாசாகிப் விக்கே பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய ஆபரேஷன் செய்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் ராமகாந்த் பாண்டா, குஜராத்தை சேர்ந்த பிரபல நடன கலைஞர் மல்லிகா சாராபாய், டி.எல்.எப். நிறுவன தலைவர் குஷால் பால்சிங், அமெரிக்காவில் வசிக்கும் விஞ்ஞானி ஆரோக்கியசாமி ஜோசப் பால்ராஜ் ஆகியோரும் பத்ம பூஷண் விருது பெற்றவர்களின் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.
சென்னையை சேர்ந்த பிரபல தொழில் அதிபர்கள் வேணு சீனிவாசன், சத்யம் கம்ப்ïட்டர் நிறுவன நிர்வாக குழுவின் முன்னாள் உறுப்பினர் டி.என்.மனோகரன், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயன், கல்வியாளர் ராஜலட்சுமி பார்த்தசாரதி என்ற திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி (டாக்டர் ரங்கநாதன் பார்த்தசாரதி), ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி, கோவையை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஆகிய 7 பேர் உள்ளிட்ட 81 பேர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பிரபல இந்தி நடிகர் சைப் அலிகான், இந்தி நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக், பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெக்வால், நோபல் பரிசு பெற்ற பிரபல ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி, கர்நாடகத்தை சேர்ந்த டெலிவிஷன் மற்றும் நாடக நடிகை அருந்ததி நாக், பிரபல கிரிக்கெட் வீரர் தெண்டுல்கரின் பயிற்சியாளரான 78 வயது ராமகாந்த் அச்ரேகர், ஆகியோரும் பத்மஸ்ரீ விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
பத்ம விருது பெற்றவர்களில் 10 பேர் விஞ்ஞானிகள் ஆவார்கள். நோபல் பரிசு பெற்ற தமிழரான விஞ்ஞானி வெங்கடராமன் ராமகிருஷ்ணனுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல் பத்ம பூஷண் விருதுக்கு 3 விஞ்ஞானிகளும், பத்மஸ்ரீ விருதுக்கு 6 விஞ்ஞானிகளும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் பத்ம விருது பெற்றவர்களில் 17 பேர் பெண்கள் ஆவார்கள். விருது பெற்றவர்களின் பட்டியலில் வெளிநாட்டில் வசிக்கும் 13 பேரும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மிக உயரிய விருதான "பாரத ரத்னா" விருது இந்த ஆண்டு யாருக்கும் வழங்கப்படவில்லை.
பத்ம விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும். விருதுகளை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்குவார்.