Welcome to South Indian Crime Point
இன்றைய (25-02-2010) அண்மை செய்திகள்
கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி மாயம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பவர் அனந்த நாராயணன் (வயது36). அங்கு கம்ப்யூட்டர் செக்ஷனில் இயக்குனராகவும் உள்ளார். மனைவி ருக்மணி மற்றும் 2 மகள்களுடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். கடந்த 15-ந் தேதி அணுமின் நிலையம் சென்ற இரவு 9 மணி வரை வீடு திரும்பாததால் அணுமின் நிலையத்திற்கு அவரது மனைவி போன் செய்து விவரம் கேட்டார். அனந்தநாராயணன் இன்று வேலைக்கு வர வில்லை என்று கூறினர். இதனால் ருக்மணி தெரிந்த இடங்களுக்கு போன் செய்து விசாரித்தார். ஆனால் அவரை காணாததால் யாரேனும் கடத்தி இருக்கலாம் என கருதி சதுரங்க பட்டினம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அனந்த நாராயணனை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் நாளை தாக்கல்
2010-2011ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் நாளை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய அரசின் ஆலோசனைப்படி சில குறிப்பிட்ட வரிகள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேரடி வரிகள், வருமான வரி சட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





மும்பையில் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் கைது
மராட்டியம் மற்றும் கோவா மாநிலங்களுக்கான தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மஞ்சித்சிங்பாலி. இருமாநில தபால்நிலையங்கள் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. இவர் தபால்நிலையங்களுக்கு சொந்தமான நிலங்களை தனியாருக்கு விற்றதாக புகார் கூறப்பட்டது. இதற்காக இவர் ரூ.2 கோடி லஞ்சமாக பெற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து சி.பி.ஐ.யின் லஞ்சஒழிப்பு போலீசார் மஞ்சித்சிங் பாலியின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை திறப்பு விழாவிற்காக பிரதமருக்கு நேரில் அழைப்பு
மார்ச் 13ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவையின் புதிய கட்டிட வளாக திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. டில்லி சென்றுள்ள தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் அழைப்பிதழை நேரில் வழங்கினார். மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா, சபாநாயகர் மீராகுமார் ஆகியோரையும் நேரில் சந்தித்து ஸ்டாலின் அழைப்பிதழ் வழங்க உள்ளார்.





மெக்சிகோ நாட்டில் 13 பேர் சுட்டுக்கொலை
மெக்சிகோ நாட்டில் உள்ள ஏசாகா என்ற இடத்தில் வீட்டுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் ஒருவன் அங்கிருந்தவர்களை சுட்டான். இதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் இறந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களையும் நோக்கி அவன் சரமாரியாக சுட்டதில் 4 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் காரில் ஏறி தப்பி ஓடினான். போலீசாரும் காரில் அவனை விரட்டி சென்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் சரமாரியாக சுட்டான். இதில் 5 போலீசார் உயிர் இழந்தனர். 13 பேரையும் கொன்று விட்டு மர்ம மனிதன் அங்கி ருந்து தப்பி ஓடி விட்டான். அவன் யார் என்ற விவரம் தெரியவில்லை.
பயங்கரவாத தாக்குதலில் பலியான தமிழக ராணுவ வீரரின் உடல் தகனம்
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு தாலுகாவில் உள்ள நடுவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வக்குமார்(38). இவர் இந்திய ராணுவப் படையில் பணியாற்றி வருகிறார். பிப்ரவரி 23ம் தேதியன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் செல்வக்குமார், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். இதனையடுத்து செல்வக்குமாரின் உடல் சொந்த ஊரான நடுவூர் கிராமத்திற்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் 21 குண்டுகள் முழங்க செல்வக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.