Welcome to South Indian Crime Point
டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அரசியல் செய்திகள்
திருச்சி மாவட்ட காங்கிரசில் புதிதாக வெடிக்கும் “கோஷ்டிக்குள் கோஷ்டி” கலாச்சாரம்
தமிழக காங்கிரசில் கோஷ்டி என்பது பழசு! “கோஷ்டிக்குள் கோஷ்டி” என்பதுதான் இப்போது புதுசு என்கின்றன. திருச்சி காங்கிரசார். வாசன் அணி, சிதம்பரம் அணி, தங்கபாலு அணி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அணி, கிருஷ்ணசாமி அணி, என இந்த தலைவர்கள் தலைமையில் காங்கிரசார் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோஷ்டியாக செயல்பட்டு வந்தனர்.
இப்போது ஒரு படி முன்னேறி இந்த கோஷ்டிக்குள்ளேயே கோஷ்டி என்று அளவிற்கு சென்று விட்டது. திருச்சியில் சோனியா காந்தியின் பிறந்த நாளில் வெட்ட வெளிச்சமானது கோஷ்டிக்குள் கோஷ்டி கலாச்சாரம்.
ஈ.வி.கே.எஸ். ஆதரவாளரான மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் சோனியாகாந்தி பிறந்த நாளை இனிப்பு வழங்கி கொண்டாடினார். ப.சிதம்பரம் ஆதரவாளரான மேயர் சுஜாதா, வாசன் கோஷ்டியை சேர்ந்த கராத்தே முத்துகுமார் கே.டி.தனபால் மற்றும் பாரி, ராஜகோபால், சதக் அப்துல்லா, சத்தியநாதன். கவுன்சிலர்கள் செந்தில்நாதன், காளீஸ்வரன், முகுந்தன், மீனா கண்ணன், ஜவகர், இனிக்கோ ஆரோக்கியமேரி, உய்யக்கொண்டான் பாஸ்கர், ஜோசப், வில்ஸ் முத்துக்குமார் என பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் ஆதரவாளரான மேயர் சுஜாதா அருணாச்சலமன்ற கூட்டத்தில் பங்கேற்க மற்றொரு ஆதரவாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் ஆர்.சி.பாபு, ஜங்சன், ராஜீவ்காந்தி, சிலை அருகே பிறந்த நாளை கொண்டாடினார். இதில் தங்கபாலு அணியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஹேமா, முகுந்தன், ராஜ்மோகன், மகிலா காங்கிரஸ், அமுதா, கிரிஜா, மன்சூர்அலி, லால்குடி சிற்றரசு, உறையூர் கோபி, சேகர், பட்டேல் என பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணசாமி அணியை சேர்ந்த வக்கீல் சரவணனும் சேர்ந்து கொண்டனர்.
வாசன் அணியில் ஒரு பிரிவினர் அருணாச்சலமன்ற நிகழ்ச்சியில் பங்கேற்க மற்றொரு வாசன் அணி , சங்கீதாஸ் ஓட்டலில் சோனியா பிறந்த நாளில் பெண்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இதில வாசன் ஆதரவாளரான முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், கவுன்சிலர் கிருஷ்ணவேணி, கிஷோர் அமீர் என வாசன் அணி கலந்து கொண்டது.
இது தவிர ஸ்ரீரங்கத்தில் வாசன் அணியை சேர்ந்த காபி பாலு தலைமையிலும் தனியாக பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் தனித்தனியாக காங்கிரசார் சோனியா பிறந்த நாளை கொண்டாடி இனிப்பு வழங்கினர்.
முன்பு காங்கிரசில் ஒவ்வொரு தலைவர்கள் தலைமையிலும் ஒரு கோஷ்டி இருந்தது. இப்போது அந்த தலைவர்கள் அணிகளுக்கு உள்ளேயே கோஷ்டிகள் உருவாகி விட்டது.
ராகுல் காந்தியிடம் ஒருமுறை காங்கிரசில் பல கோடிகள் உள்ளதே என கேள்வி கேட்ட போது அது கோஷ்டி இல்லை. ஒருவரையொருவர் அரசியலில் முந்தும் போட்டி என்றார். ராகுல் காந்தியே கோஷ்டியை போட்டி என கூறிவிட்டதால்தான் கோஷ்டிக்குள்ளேயே கோஷ்டி உருவாகி விட்டது என்று காங்கிரசார் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் கோஷ்க்குள் கோஷ்டியால் யாருக்கு லாபம் தெரியுமா? மக்களுக்குதான்.
அதனால்தானே பல இடங்களில் நடந்த கொண்டாடத்தால் அதிகம் பேருக்கு இனிப்பு உதவிகள் கிடைத்தது.
ஊறு ரெண்டு பட்டால் யாருக்கோ கொண்டாட்டம் என்பார்களே அது இதுதானோ!
அதிகப்படியாக வாசன் கோஷ்டியில்தான் அதிகம் உள்கோஷ்டி உள்ளதாம்.
முஸ்லிம் பிரதமராக தாக்கரே நிபந்தனை
"முஸ்லிம் ஒருவர், நாட்டின் பிரதமராவதற்கு முன், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என, சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே தெரிவித்தார்.
உ.பி.,யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், "இந்தியாவில் ஒருவர் பிரதமராவதற்கு மதமும், ஜாதியும் ஒரு தடையே அல்ல. "முழுமையான தகுதி வாய்ந்த யார் வேண்டுமானாலும் பிரதமராக முடியும்.
தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சீக்கியர் என்பதற்காக நியமிக்கப்படவில்லை. அந்த பதவிக்கு தகுதி வாய்ந்த நபராக இருப்பதால் தான், அவர் பிரதமராக முடிந்தது' என்றார். இது குறித்து சிவசேனா கட்சி பத்திரிகையான, "சாம்னா'வில் கருத்து தெரிவித்த அக்கட்சித் தலைவர் பால் தாக்கரே நேற்று கூறியதாவது: ராகுல் நாட்டின் மொத்தத்திற்கும் உரிமையாளர் அல்ல. முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதுடன், குடும்ப நலத்திட்டம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு மற்றும் வந்தே மாதரம் பாடல் ஆகியவற்றை கட்டாயமாக்க வேண்டும். அதன் பின் தான் முஸ்லிம் ஒருவர் பிரதமராக முடியும்.
இன்றைய செய்திப் புகைப்படங்கள்






இந்திய இறையாண்மைக்கு எதிராக பேச்சு: வைகோ மீது புதிய வழக்கு
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ மீது புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த 15.7.09 அன்று சென்னை ராணி சீதை அரங்கத்தில் பிரபல எழுத்தாளர் இன்குலாப் எழுதிய குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இப்புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அந்த பேச்சை போலீசார் பதிவு செய்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் வைகோவின் அந்த பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்துள்ளார். வைகோ மீது 124 (ஏ), 153 (1) ஆகிய 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ மீது ஏற்கனவே பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சமயத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக 2 வழக்குகள் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை தற்போது எழும்பூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
வேட்பாளர் டிபாசிட் கட்டணம் உயருகிறது கருத்துக் கணிப்புக்கும் தடை விதித்து மசோதா
தேர்தலில்ஏதோ பெயருக்காக போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை பதவி நீக்கம் செய்வதற்கான விதிமுறைகளை எளிமையாக்கவும், ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்கவும் வகை செய்யும் சட்ட மசோதா, நேற்று பார்லிமென்டில் நிறைவேறியது.
ராஜ்ய சபாவில் ஏற்கனவே நிறைவேறிய இந்த மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடைபெற்றது. மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:தேர்தல் முறையில் உள்ள சில தெளிவின்மையை நீக்க, மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தில், விரிவான திருத்தங்களை அரசு கொண்டு வரும்.
இதுதொடர்பாக, தேசிய அளவிலான ஆலோசனை அடுத்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வாக்காளர்களின் விரல் ரேகையை பதிவு செய்வது குறித்தும் அரசு பரிசீலிக்கும். விலாசம் மாறினாலும், வாழ் நாள் முழுவதும் பயன்படுத்தும் வகையிலான வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்படும்.ஓட்டுப் போடுவதை கட்டாயமாக்குவது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
அதேபோல், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது மற்றும் வேட்பாளருக்கு ஆதரவாக வேறு ஒருவர் பெயரில் வெளியிடப்படும் விளம்பரங்கள் போன்றவை குறித்தும், விரிவான அளவில் ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம்.இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
பார்லிமென்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டமான, "மக்கள் பிரதிநிதித்துவ (திருத்த) சட்ட மசோதா 2009' ன்படி, லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் டிபாசிட் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரமாக ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், பெயருக்கு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறையும். அதேநேரத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு, இந்த டிபாசிட் தொகையானது 5,000 ரூபாயில் இருந்து 12, 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தற்போது டிபாசிட் தொகையாக, ஐந்து ஆயிரம் ரூபாய் செலுத்துகின்றனர். இனி, 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பினர் தற்போதுள்ள 2,500 ரூபாய்க்கு பதிலாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும்.








எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் துணை நிற்பேன்:துணை முதல்வர் ஸ்டாலின் உறுதி
ஆளுங்கட்சி, தோழமைக்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் துணை நிற்பேன் என, துணை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அச்சிறுபாக்கம் ஒன்றியம் ஆத்தூரில் புதிய சமத்துவபுரம் திறப்பு விழா, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் விழா, வளர்ச்சி திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் அன்பரசன் தலைமை தாங்கினார்.சமத்துவபுரத்தை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: மக்களுக்கும் முதல்வருக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் என்னிடம் துணை முதல்வர் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். முதல்வருக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல, மக்கள் பிரதிநிதிகளுக்கும் துணையாக நிற்பேன்.ஆளுங்கட்சி, தோழமைக்கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் துணை நிற்பேன்.
என்னை பொறுத்தவரை இப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்று பணியாற்றும்போது உள்ள மகிழ்ச்சியை விட, உங்களில் ஒருவனாக இருந்து பணியாற்றும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.பெரியார் பெயரில் முதல்வரால் உருவாக்கப்பட்ட திட்டம் சமத்துவபுரம் திட்டம். ஜாதி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
ஜாதியை ஒழிக்க உருவாக்கப்பட்டது தான் சமத்துவபுரம். 145 சமத்துவபுரங்கள் உருவாக் கப்பட்டன. 2008-09ம் ஆண்டில், 29 சமத்துவபுரங்கள் திறக்கப்படும் என அறிவித்தார். தற்போது 19வது சமத்துவபுரத்தை திறந்து வைத்துள்ளேன். மீதமுள்ள 10 சமத்துவபுரங்கள் ஜனவரி மாதத்திக்குள் திறக்கப்பட உள்ளன. 2009-10ல் மேலும் 10 சமத்துவபுரங்கள், 2010-11ல் 36 சமத்துவபுரங்கள் திறக்கப்பட உள்ளன.
மகளிர் குழுக்களை பார்க்கும்போது உண்மையிலேயே என்னை மறந்து விடுகிறேன். மேடைக்கு வருவதற்கு முன் மகளிர் குழுக்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சியை பிரமிப்போடு பார்த்துவிட்டு வந்தேன். 1989ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட மகளிர் குழுக்கள் இன்று மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.சட்டசபை உறுப்பினர்கள், லோக்சபா உறுப்பினர்களின் கோரிக்கைகளை உரிய வகையில் ஆய்வு செய்து அவை நிறைவேற்றப்படுவதற்கு துணை நிற்பேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.