Welcome to South Indian Crime Point
புலனாய்வு ரிப்போர்ட்
தனுஷ்கோடியில் புலிகள் ஊடுருவல்? : புலனாய்வு துறையினர் தீவிர சோதனை

இலங்கையில் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த புலிகள் இயக்கத்தினர் சிலர், தனுஷ்கோடியில் வந்திறங்கியதாக தகவல் பரவியதை தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவில் புலனாய்வு துறையினர் தனுஷ்கோடியில் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கியூ பிரிவு போலீசாரும் இரவு முழுவதும் கண்காணிப்பில் ஈடுபட்டு, மீனவர்களிடம் விசாரணை செய்தனர்.
நேற்று அதிகாலை தனுஷ்கோடி கம்பிப்பாடு வடக்கு கடற்கரை பகுதியில், இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று உடைந்த நிலையில் கரை ஒதுங்கிக்கிடந்தது. அதை புலனாய்வு துறையினர் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில், தமிழக கடலோர காவல் படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்கடலில் மீனவர்களின் படகையும் சோதனையிட்டனர். அடையாள அட்டை இல்லாமல் சென்ற மீனவர் களை பிடித்து எச்சரித்து அனுப்பினர்.
இன்ஸ்பெக்டர் சேகர் கூறுகையில், "ராமேஸ்வரம், மண்டபம் கடல் பகுதியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சில நாட்களாக தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக,''தெரிவித்தார்.
கடல் மார்க்கமாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டினம், மண்டபம் உட்பட தமிழகத்தில் 12 இடங்களில் மரைன் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மரைன் போலீசார் கடல் மார்க்கமாக ரோந்து செல்ல, 12 மற்றும் ஐந்து டன் எடை கொண்ட அதிநவீன ரோந்து படகுகள் வழங்கப்பட்டு, அவற்றில் கடலில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
தற்போது, கடற்கரை பகுதியை கண்காணிக்க அதிவேக ஜீப் மற்றும் இரு சக்கர வாகனங்கள் வழங்கப் பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்ட மரைன் இன்ஸ்பெக்டர் சேகர் கூறியதாவது: கடலில் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்பவர்களை பிடிக்கவும், ஊடுருவலை தடுக்கவும் மூன்று முதல் ஐந்து நாட்டிக்கல் தொலைவில் கடலில் ரோந்து சென்று வருகிறோம். கடலில் மீனவர் களுக்கு ஏதாவது பிரச்னை என்றாலும், அதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கிறோம். மேலும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவது தெரிந்தால், அவர்களை எச்சரித்து அனுப்புகிறோம். தொடர்ந்து ஈடுபட்டால் வழக்கு பதியப்படுகிறது, என்றார்.