Welcome to South Indian Crime Point

மகாத்மா காந்தி கொலை வழக்கு பாகம் - பதிமூன்று







கோட்சே, ஆப்தே இருவரும் 1949 நவம்பர் 15_ந்தேதி தூக்கில் போடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அவர்களை தூக்கில் போட ஏற்பாடுகள் நடந்தன. தூக்கு மேடையில் ஒரே சட்டத்தில் இரண்டு தூக்குக் கயிறுகள் தொங்கவிடப்பட்டன. இருவரையும் ஒரே நேரத்தில் தூக்கில் போடவே இந்த ஏற்பாடு. நவம்பர் 15_ந்தேதி காலை, அம்பாலா சிறையில் கோட்சே, ஆப்தே ஆகியோர் இருந்த அறைக்கதவுகள் திறக்கப்பட்டன.

கடைசி நேரத்தில் தூக்குத்தண்டனைக்குத் தப்பிவிடுவோம் என்று எண்ணிக்கொண்டிருந்த ஆப்தே, தூக்கில் போடுவதற்கு ஆட்கள் வந்திருப்பதைக்கண்டு கண் கலங்கினான். இருவருடைய கைகளும் பின்புறமாக கட்டப்பட்டன. காலை 7.52 மணிக்கு இருவரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்படும்போது, "அகந்த் பாரத் அமர் ரஹே" (அகண்ட பாரதம் நீடூழி வாழ்க) என்று குரல் எழுப்பியவாறு அவர்கள் சென்றனர். தூக்கு மேடையை அடைந்ததும் தனக்காகவும், கோட்சேக்காகவும் இரண்டு கயிறுகள் தொங்குவதை ஆப்தே பார்த்தான். அவன் கால்கள் நடுங்கின. லேசாக மயக்கம் அடைந்தான். காவலர்கள் மயக்கத்தை தெளியவைத்து அவனை மேடைக்குத் தூக்கிச்சென்றனர்.

கோட்சே எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் தானாகவே தூக்கு மேடைக்குச் சென்று தூக்குக் கயிற்றுமுன் நிமிர்ந்து நின்றான். இருவருடைய முகங்களும் கறுப்புத்துணியால் மூடப்பட்டன. பிறகு கழுத்தில் சுறுக்குக் கயிறுகள் மாட்டப்பட்டன. கயிறுகள் சரியாக மாட்டப்பட்டுள்ளனவா என்று அதிகாரிகள் சரிபார்த்தனர். சரியாக காலை 8 மணிக்கு ஜெயில் அதிகாரி கை அசைத்து சைகை காட்ட, தூக்குத்தண்டனையை நிறைவேற்றுவதற்காக வந்திருந்தவர், தூக்கு மேடையின் விசையை அழுத்தினார். உடனே கோட்சே, ஆப்தே ஆகியோர் பாதங்களுக்கு அடியில் இருந்த இழுவைப் பலகைகள் நகர்ந்தன. கால்கள் கீழ் நோக்கி செல்ல இருவருடைய கழுத்தையும் கயிறுகள் இறுக்கின. கோட்சேயின் உயிர் உடனே போய்விட்டது. ஆப்தேயின் உயிர் மெல்ல மெல்ல பிரிந்தது.

தூக்குக்கயிற்றில் தொங்கிய அவன் உடல், சில நிமிடங்கள் துடித்துக்கொண்டிருந்தபின் அடங்கியது. இரு உடல்களும் அரை மணி நேரம் தூக்குக் கயிற்றிலேயே தொங்கின. தலைமை மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டு, "உயிர் இல்லை" என்று உறுதிபடுத்தியபின் உடல்கள் தூக்கு மேடையிலிருந்து இறக்கப்பட்டன. உடல்களைப்பெற்று இறுதி ஊர்வலம் நடத்த கோட்சே, ஆப்தே உறவினர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இப்படி ஊர்வலம் நடத்தினால் கலவரம் ஏற்படலாம் என்று கருதிய அதிகாரிகள், உடல்களை சிறைச்சாலைக்கு உள்ளேயே எரித்துவிட முடிவு செய்தனர். அதன்படி, சிறைச்சாலைக்குள் "சிதை" அமைக்கப்பட்டு, இருவருடைய உடல்களும் தகனம் செய்யப்பட்டன. அதன்பின், சாம்பல்கள் கலசங்களில் சேகரிக்கப்பட்டன. தகனம் நடந்த இடத்தை யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காக, அந்த இடத்தை ஏர் வைத்து உழுதுவிட்டனர்.

"என்னுடைய சாம்பல் சிந்து நதியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) கரைக்கப்படவேண்டும். சிந்து நதி, அகண்ட இந்துஸ்தானத்தில் சுதந்திரமாக ஓடக்கூடிய காலம் மீண்டும் வரும். அதுவரை என் அஸ்தியை பாதுகாக்கவேண்டும்" என்று கோட்சே, தனது கடைசி விருப்பத்தை தெரிவித்திருந்தான். அஸ்தி கலசத்தை வைத்து, கோட்சேயின் சொந்த ஊரான புனாவில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட ஆப்தேயின் ஆதரவாளர்கள் திட்டமிட்டிருந்தனர். எனவே, அஸ்தியை உறவினர்களிடம் கொடுக்காமல், அருகே ஓடிக்கொண்டிருந்த காகர் என்ற ஆற்றுக்குக்கொண்டு போனார்கள். அந்த ஆற்றின் மீது சிறிய ரெயில்வே பாலம் இருந்தது. அதன் மீது இருந்து, அஸ்தியை ஆற்றில் கொட்டினார்கள். இந்த விஷயம் கோட்சே ஆதரவாளர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அந்த ஆற்றுக்கு விரைந்தோடினர். ஆற்றில், அரை அடி தண்ணீர்தான் ஓடிக்கொண்டிருந்தது. சாம்பலின் ஒரு பகுதி கரையாமல் இருந்தது. அதை திரட்டி, ஒரு கலசத்தில் வைத்து, எடுத்துச் சென்றார்கள். ரகசியமான இடத்தில் பத்திரமாக பாதுகாத்தார்கள்.

காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்த கோபால் கோட்சே (நாதுராம் கோட்சேயின் தம்பி), விஷ்ணு கார்கரே, மதன்லால் ஆகியோர் தண்டனை காலம் முடிவடைந்து, 1964 அக்டோபர் அன்று விடுதலை ஆனார்கள். அவர்களுக்கு கோட்சே ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதுவரை பாதுகாத்து வரப்பட்ட கோட்சேயின் அஸ்தி கலசம் (வெள்ளியால் செய்யப்பட்டது) கோபால் கோட்சேயிடம் தரப்பட்டது. "இப்போது பாகிஸ்தானில் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி, என்றாவது ஒருநாள் அகண்ட பாரதத்தில் ஓடும். அப்போது இந்த அஸ்தி என் அண்ணனின் கடைசி விருப்பப்படி சிந்துவில் கரைக்கப்படும். அதுவரை, இந்த அஸ்தி கலசத்தை நான் பாதுகாப்பேன்" என்று கோபால் கோட்சே அறிவித்தான். அதன்படி, புனாவில் உள்ள கோபால் கோட்சேயின் வீட்டில் அந்த அஸ்தி கலசம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோட்சே இறந்த நாளன்று (நவம்பர் 12) கோட்சே ஆதரவாளர்கள் அங்கு கூடுகிறார்கள். அந்த அஸ்தி கலசத்துக்கு பூஜை நடத்துகிறார்கள்.

"காந்தியை நான் கொலை செய்தது ஏன்?" என்ற தலைப்பில், கோட்சே சிறையில் இருந்தபோது, ஒரு புத்தகம் எழுதினான். அதை கோபால் கோட்சே புத்தகமாக அச்சிட்டு 1994_ல் வெளியிட்டான். அதன் வெளியீட்டு விழாவில், காந்தியை கடுமையாகத் தாக்கிப்பேசினான். அதனால் கோபால் கோட்சே கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டான். "நானும் காந்தியின் படுகொலையும்" என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கோபால் கோட்சே எழுதினான். அந்தப் புத்தகத்தை மராட்டிய அரசு தடை செய்துள்ளது. வயதான காலத்தில் கோபால் கோட்சே இப்போது பம்பாயிலும், புனாவிலும் இருந்துகொண்டு, "எந்தந்த இந்துக்கோவில்கள், முஸ்லிம் மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளன?" என்று ஆராய்ந்து வருகிறான்.

ஆயுள் தண்டனை அடைந்து விடுதலை அடைந்த மதன்லால் பாவா, பம்பாயில் பொம்மைகள் தயாரித்து வாழ்க்கையை நடத்தினான். விஷ்ணு கார்கரே அகமத் நகருக்குச்சென்று, தன்னுடைய "டெக்கான் கெஸ்ட் அவுஸ்" ஓட்டலைத் தொடங்கி நடத்தினான். பத்து ஆண்டுகள் கழித்து, (1974_ம் ஆண்டில்) மாரடைப்பால் மரணம் அடைந்தான். ஆரம்ப கட்டத்திலேயே விடுதலை செய்யப்பட்ட வீரசவர்க்கார், தனது 83_வது வயது வரை உயிர் வாழ்ந்து 1966 பிப்ரவரி 26_ந்தேதி மாரடைப்பால் காலமானார்.

Bookmark and Share

Read More     Comments (33)