South Indian Crime Point as your Homepage
1000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சென்னையில் மேலும் 2 பேர் கைது
சென்னை, ஜன.22- பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டிருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் துணையுடன் கோடிக்கணக்கான ரூபாய் கள்ள நோட்டுகளுடன் சிறுசிறு குழுக்களாக ஜார்க்கண்ட் மாநில கள்ள நோட்டு கும்பல் அனைத்து மாநிலங்களிலும் புகுந்துள்ளதை மத்திய புலனாய்வு அமைப்பினர் கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து புலனாய்வு அமைப்பினர் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். சென்னையில் கள்ள நோட்டுகளுடன் பதுங்கி இருந்த 3 பேர் பிடிபட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மத்திய புலனாய்வு போலீசார் நாடு முழுவதும் உள்ள மாநில போலீசாரையும், சி.பி.சி.ஐ.டி. பிரிவு கள்ள நோட்டு தடுப்பு பிரிவையும் உஷார்படுத்தினர். வரிவசூல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகம், கேரளா ஆகிய தென்மாநில போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் மத்திய புலனாய்வு பிரிவினர் பேசினார். அப்போது அவர்கள் 'உங்கள் பகுதிகளில் உள்ள வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், மற்றும் வரி வசூல் செய்யும் அரசு அலுவலகங்கள் அனைத்தையும் உஷார்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து தமிழகம், மற்றும் புதுவையில் கள்ள நோட்டு கும்பலை பிடிக்க போலீசார் வியூகம் அமைத்தனர். புதுவை ஜிப்மர் மருத்துவமனை அருகில் கள்ள நோட்டை மாற்றமுயன்ற முகமது இஸ்மாயில் ஷேக் (30) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சென்னை வந்து பின்னர் புதுச்சேரி சென்றது தெரிய வந்தது. இஸ்மாயில் ஷேக் மட்டும் போலீசில் சிக்கியுள்ளார். மற்ற 5 பேரும் தப்பி தலைமறைவாகி விட்டனர். இவர்களை பிடிக்க மத்திய புலனாய்வு அமைப்பினரின் உதவியை புதுவை போலீசார் நாடியுள்ளனர். புதுவை போலீசில் சிக்கிய இஸ்மாயில் ஷேக் போலி வாக்காளர் அடையாள அட்டையை காட்டி சிம்கார்டு வாங்கி இருப்பது தெரிய வந்தது. அவனிடம் இருந்த வாக்காளர் அடையாள அட்டையில் 'இஸ்ரா உல் ஷேக்' என்ற பெயர் இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் பாரதி நகரில் இஸ்ரா உல் ஷேக் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இஸ்ரா உல் ஷேக் அப்பகுதியில் உள்ள 'ஜோதி ராஜன்' என்ற மளிகை கடையில் 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்றபோது போலீசில் சிக்கினார். 1000 ரூபாய் நோட்டை கொடுத்து இஸ்ரா உல் ஷேக், 1 கிலோ பேரீச்சம் பழம் கேட்டான். அப்போது கடை உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். சைதாப்பேட்டை இதே போல சைதாப்பேட்டை மார்க்கெட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோ ரில் ஒன்றில் 1000 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற ராகுல் என்ற முகமது என்ற வாலிபரும் கைது செய்யப்பட்டார். 8 டெட்டால் சோப்புகளை வாங்கிவிட்டு 1000 ரூபாய் நோட்டை ராகுல் கடைக்காரரிடம் கொடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ராகுலை கைது செய்தனர். இவரும் சிறையில் அடைக்கப்பட்டார். சிட்லபாக்கத்தில் பிடிபட்ட இஸ்ரா உல் ஷேக்கும், புதுவையில் சிக்கிய இஸ்மாயில் ஷேக்கும் நெருங்கிய கூட்டாளிகள். 2 பேரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து ஒன்றாகவே சென்னை வந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் பிடிபட்ட ராகுலும், இவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஆனால் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்காமலேயே இருந்துள்ளனர். சென்னையில் கைதான 2 பேரிடமும் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் கடைசிவரை அவர்கள் தாங்கள் தங்கியிருந்த இடத்தை கூறவே இல்லை. தமிழகம் மற்றும் புதுவையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ் மாயில் ஷேக்கை போலீசார் நாளை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். அப்போது மத்திய புலனாய்வு அமைப்பினரும் அவர்களிடம் விசாரணை நடத்துகிறார்கள். இந்த விசாரணையின் போது தலைமறைவாக உள்ள கள்ள நோட்டு கும்பல் மற்றும் தப்பிய ஓடிய அவனது கூட்டாளிகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
தேனி அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்ட 8 மாத குழந்தை சாவு 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
ஆண்டிப்பட்டி, ஜன. 22- தேனி மாவட்டம் எரதி மக்காள்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 8 மாத குழந்தை மதுபாலன், அதே பகுதியை சேர்ந்த செல்வராஜின் குழந்தைகள் அழகுராஜன் (வயது11), கார்த்திகா (8). இந்த 3 குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் குழந்தைகளை எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று ஊசி போட்டனர். ஊசி போட்ட சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் திடீரென மயக்கமடைந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பதறியபடி குழந்தைகளை தூக்கி கொண்டு தேனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு மதுபாலன் சிகிச்சை பலனின்றி இறந்தான். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுபாலன் இறப்பிற்கு காரணமான டாக்டர் உமா, நர்சு மாரியம்மாள் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி சுரேஷின் உறவினர்கள் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. விஜயபாஸ்கரன், ஆர்.டி.ஓ. அனிதா, தங்க தமிழ்செல்வன் எம். எல்.ஏ. மற்றும் போலீசார் விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுபடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு மறியலை கைவிட்டனர். இதனால் மதுரை-தேனி மெயின் ரோட்டில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி மகேஸ் வரன் கூறியதாவது:- சளி, இருமல், காய்ச்சலுக்காக சிகிச்சைக்கு வந்த பலருக்கும் பாரசிட்டமால் மருந்து கொண்ட ஊசி போடப்பட்டது. மூன்று குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. காரணம் என்ன என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இறந்த மதுபாலன் உடலை இன்று காலை 2 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் முக்கிய உறுப்புகள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தேனி மருத்துவமனை டாக்டர்கள் கூறினர். |
தமிழ்நாட்டில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்
சென்னை, ஜன.22- சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி வரவேற்றார். கூட்டத்தில் நாடார் பேரவை செயலாளர் தர்மராஜ், சத்திரியநாடார் சங்க செயலாளர் சந்திரன் ஜெயபால், தேவேந்திரகுல வேளாளர் சஙக தலைவர் ஜான்பாண்டியன், யாதவ மகாசபை தலைவர் தேவநாதன், முத்தரையர் சங்க செயலாளர் ராஜமாணிக்கம், மற்றும் கிஷ்ணபறையனார், ஜவாஹிருல்லா, சுப்பிர மணியன், சுப.அண்ணாமலை, அனந்தராமன், ஐசக்அய்யா, பொற்கை நடராஜன், ரமேஷ் செட்டியார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படும். எனவே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு முறையை அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு அளவை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 100 சதவீத அளவுக்கு இடஒதுக்கீடு தேவை. நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். பெட்ரோல், கியாஸ் ஏஜென்சிகள் மற்றும் பெரிய பணிகளுக்கான ஒப்பந்தங்கள் வழங்குவதிலும் இடஒதுக்கீடு முறையை கொண்டு வரவேண்டும். முல்லை பெரியாறு சிக்கல் தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாகவும், அதன்பிறகு 152 அடியாகவும் உயர்த்தி தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும். ராமேசுவரம் மீனவர்கள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இலங்கை கடல் எல்லையிலும் மீன்பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லா சமுதாயத்திலும் உழைக்கும் மக்கள் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கின்றனர். சாலை விபத்துகள், கொ லை-கொள்ளை போன்ற சமூக சீரழிவுக்கு மதுபழக்கம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனவே தமிழ் நாட்டில் உடனடியாக முழு மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |


