Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

இலங்கையில் போரை நிறுத்தகோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்



--> ஈழத் தமிழர்கள் எல்லா உரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழ்வதற்காக, தனி ஈழம் நாட்டை உருவாக்க விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்திப் போராடி வருகிறார்கள். அவர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நடந்து வரும் போரில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் உணவு, உடை, மருந்து எதுவுமின்றி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

--> இலங்கைத் தமிழர்கள் முழுமையான உரிமை களைப்பெற ஆதரவு தெரிவித்தும், இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற மத்திய- மாநில அரசுகள் அக்கறை செலுத்தாததைக் கண்டித்தும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்னையில் இன்று (திங்கள்) உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. காலை 9.09 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.

--> ஜெயலலிதா உண்ணாவிரதப்போராட்ட மேடைக்கு வந்ததும், தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதையடுத்து அவர் உண்ணாவிரத மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

--> அவருடன் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வரதராஜன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் சேக் தாவூது, இந்திய தேசிய லீக் தலைவர், பஷீர் அகமது, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணி கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், காயிதே மில்லாத் பேரன் தாவூத் மியாகான், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக கிளைத்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி அமர்ந்திருந்தனர். அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் மேடையில் இருந்தனர்.

--> உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். அவர்கள் உட்காருவதற்காக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அ.தி. மு.க. தொண்டர்கள்வருகையால் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை பகுதி நிரம்பி வழிந்தது.

--> இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் அம்மா தங்களை வணங்குகிறோம் என்று எழுதப்பட்ட போர்டுகளை ஏந்திப் பிடித்தப்படி பெரும்பாலான தொண்டர்கள் வந்திருந்தனர்.

--> உண்ணாவிரத மேடையில் இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா முதலில் அதில் ரூ.5 லட்சம் பணம் போட்டு நிதிதிரட்டுவதைத் தொடங்கி வைத்ததும் நிதி திரட்டும் பணி தொடங்கியது.

--> அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் வரிசையில் வந்து உண்டியலில் நிதி செலுத்தினார்கள்.

--> இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பதைப் பாராட்டி அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் வாழ்த்திப் பேசினார்கள். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஜெயக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கலை ராஜன் வரவேற்றுப் பேசினார்.

--> வடசென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு, பதர் சயீத் எம்.எல்.ஏ., நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், மாணவர் அணி செயலாளர் மகராஜன், ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் அர்ச்சுனன், சிறுபான்மை பிரிவு செயலாளர் முகம்மது அலி சின்னா, பகுதி செயலாளர் அலிகான் பஷீர், அவைத் தலைவர் கோதண்டராமர், நீலகண்டன் சைதை ஆனைக்குட்டி ஆனந்தன், அண்ணாநகர் வள்ளுவன், வேளச்சேரி ஆனந்த ராஜா, என்.எஸ்.தமீம் மற்றும் முகப்பேர் இளஞ்செழியன், ஈக்காட்டு தாங்கல் செல்வம், முள்ளிக் கொளத்தூர் ஊராட்சி தலைவர் ஜி.கே.பாபு, வேலப்பன்சாவடி உதயகுமார், எஸ்.ஆர்.விஜய குமார், ஏ.ஏ.அர்ஜுனன், என்.தயாளன், பேராசிரியர் ரவிச்சந்திரன்.

--> அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக பொதுச் செயலாளர் ச.இசக்கிமுத்து, சைதை கணேசன், கே.எஸ்.இளங்கோவன், செல்வகுமார், வடபழனி ராஜேந்திரன், சண்முகவேல் பாண்டியன், மயில்வாகனன், விருகம்பாக்கம் விஜயகுமார், அர்ச்சுனன், ராமநாதன் ஆகியோரும் உண்ணா விரதத்தில் பங்கேற்றனர்.

--> அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான ம.தி.மு.க. மற்றும் இடது சாரிக்கட்சிகளின் தலைவர்களும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்கள். இலங்கைத் தமிழர் ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

--> இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருப்பது இது 2-வது தடவையாகும். இதற்கு முன்பு கடந்த 1985-ம் ஆண்டு இலங்கை தமிழர்கள் படுகொலையைக் கண்டித்து செங்கல்பட்டில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார்.

--> அப்போதும் உண்டியல் வைத்து அவர் நிதி திரட்டி இலங்கைத் தமிழர்களுக்கு உதவினார். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயலலிதா மீண்டும் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

--> மாவட்ட தலைநகரங்களிலும் இன்று அ.தி.மு.க. வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். அவற்றில் அ.தி.மு.க. தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

--> அங்கேயும் உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்கினார்கள்.

--> அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அ.தி.மு.க.சார்பில் ஒரு கோடி நிதி வழங்கினார்.

--> ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை முடித்து வைத்தார்.

Read More     Comments (33)