Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
அரசியல் கட்சிகள் அன்னதானம்: தேர்தல் கமிஷன் தடை

"கோவில்களுக்கு வெளியே அன்னதானம் என்ற பெயரில் உணவு வழங்குவதற்கு அனுமதியில்லை. மீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று நரேஷ் குப்தா எச்சரித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக சுயஉதவிக் குழுக்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இவற்றை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து, சுய உதவிக் குழுக்கள், எந்த வேட்பாளருக்கும் ஆதரவாக பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற புகார்கள் வந்தால், மகளிர் திட்டத்துக்கான திட்ட அதிகாரி, அந்தந்த குழுக்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் அனுப்புதல் அல்லது சுழல் நிதி மற்றும் இதர நிதி உதவிகளை நிறுத்தி வைத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் சமூக அமைப்புகள் நடத்தும் சுய உதவிக் குழுக்களுக்கும் இது பொருந்தும்.
மேலும், தொகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், பெரிய அரங்குகள் போன்றவை, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும், உணவு விருந்து அளிக்கவும் இதற்கு முந்தைய தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இது ஊழல் நடைமுறை. எனவே, திருமண மண்டபங்கள் போன்றவற்றை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து, அவற்றை முறைகேடாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
அரங்கங்களை திருமணம் அல்லது இதர மத சடங்குகளுக்கு தேவைப்பட்டால் அனுமதிப்பதில் ஆட்சேபனையில்லை. அவ்வாறு அனுமதிக்க வேண்டுமென்றால், அரங்குகளின் உரிமையாளர்கள் அல்லது அறங்காவலர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் அதிகாரியை முன்கூட்டியே அணுகி, எதற்காக மண்டபம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான உரிய தகவல்களை அளிக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வெளியே, "அன்னதானம்' என்ற பெயரில் பெரிய அளவில் உணவு விருந்து அளிப்பது சந்தேகத்துக்கு இடமளிக்கும். வாக்காளர்களைக் கவரும் வகையில் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற விருந்துகளை அனுமதிக்கக் கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
"லவுட் ஸ்பீக்கர்கள்' தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தலாம் என்றாலும், அதிக ஒலியுடனும், தொந்தரவு ஏற்படுத்தும் வகையிலும் பயன்படுத்தாமல் இருக்க கட்டுப்பாடுகள் உள்ளன. இவற்றை இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும் ஸ்பீக்கர்கள், அதன் இணைப்புக் கருவிகளுடன் கைப்பற்றப்படும். வாகனங்களில் கட்டப்படும் ஸ்பீக்கர்களை, ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன் வரை மட்டுமே பயன்படுத்தலாம்.
அரசியல் பிரமுகர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் வைக்கக் கூடாது. எனினும், தேசிய தலைவர்கள், கவிஞர்கள், வரலாற்று புகழ் பெற்ற முந்தைய தலைவர்கள், ஜனாதிபதி, கவர்னர் போன்றோரது படங்களை வைக்க இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
நட்சத்திர தலைவர்களான, தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய, தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
அவர்களது வாகன கான்வாயில் எத்தனை வாகனங்கள் வேண்டுமானாலும் செல்லலாம். அத்தனை வாகனங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு மாநில அளவில் அனுமதி பெற்று பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான செலவு, வேட்பாளரின் செலவு கணக்கில் சேர்க்கப்படாது.
மற்ற பிரசார வாகனங்களை பொறுத்தவரை, ஒரே சமயத்தில் மூன்று வாகனங்கள் மட்டுமே வரிசையாக செல்ல வேண்டும். கூடுதல் வாகனங்கள் இருந்தால், 20 மீட்டர் இடைவெளி விட்டு, தலா மூன்று வாகனங்களாக பிரிந்து செல்ல வேண்டும்.
காவல் துறையில் சப்-டிவிஷன் அளவிலும், வருவாய்த்துறையிலும் தேர்தல் பணிக்கு தேவையான அதிகாரிகள் பணியிடம் அதிகளவில் காலியாக உள்ளன. அவற்றை நிரப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். எனினும், பதவி உயர்வு மூலம் நிரப்ப முடியாது.
தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள், பிரச்னை காரணமாக மரணமடைய நேரிட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும். புதிதாக பெயர் சேர்ப்பதற்கு மதுரை மட்டுமின்றி, திருச்சி, தஞ்சை, கடலூர் தொகுதிகளிலும் அதிகளவு விண்ணப்பங்கள் வந்துள்ளன. திருச்சியில் ஒரு பூத் அளவிலான அலுவலர் 300 விண்ணப்பங்களை சேர்த்துள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல, தஞ்சை தொகுதி கும்பகோணத்தில் அதிகளவு வாக்காளர்களை சேர்க்க ஆர்.டி.ஓ., அனுமதித்துள்ளார். தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆர்.டி.ஓ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நரேஷ் குப்தா தெரிவித்தார்.
விஜயகாந்த் பிரசாரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வழக்குகள் போடப்படுவதாக, நரேஷ் குப்தாவிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் புகார் மனு கொடுத்தார். இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
தே.மு.தி.க., சார்பாக பண்ருட்டி ராமச்சந்திரன் சந்தித்து மனு கொடுத்தார். அதில், விஜயகாந்த் தென்மாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது, அவர் மீது கண்டபடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விஜயகாந்த், தனது பிரசாரத்தை மட்டுமே நம்பியுள்ளதால், அதற்கு இடையூறு செய்யும் வகையில் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார். இவ்விஷயம் குறித்து பரிசீலிக்கப்படும். தனக்கு பல கோடி ரூபாய் பணமும், 15 சீட்களும் தருவதாக சில கட்சிகள் பேரம் பேசியதாக விஜயகாந்த் கூறியிருப்பது குறித்து புகார் வந்தால், அது குறித்து ஆய்வு செய்யப்படும். அதில் ஏதாவது விதிமீறல் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு நரேஷ் குப்தா கூறினார்.