Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி உடன்பாடு : ம.தி.மு.க., - மா.கம்யூ.,வுக்கு நாளை பங்கீடு

தொகுதிப் பங்கீட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் நீடித்து வந்த இழுபறி ஒரு வழியாக முடிவுக்கு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு மூன்று தொகுதிகளும், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முன்வந்துள்ளதால் இன்று இரவு அல்லது நாளை காலையில் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு சுமுகமாக முடிந்துவிட்டது. ம.தி.மு.க., - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு முழுமை பெறாமல் இழுபறி நீடிக்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கேட்கிற தொகுதிகளை தர வேண்டும் என, ம.தி.மு.க.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் ஒரே கோரிக்கையை அ.தி.மு.க.,விடம் உறுதியாக வைத்துள்ளன.
காஞ்சிபுரம், ஆரணி, ஈரோடு, தஞ்சாவூர், விருதுநகர், பொள்ளாச்சி தொகுதிகளை ம.தி.மு.க., கேட்டது. மத்திய சென்னை, திருவள்ளூர், விருதுநகர் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முன்வந்தது. பேச்சுவார்த்தை மீண்டும் தொடர்ந்ததில் ஐந்து தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ம.தி.மு.க., இறங்கி வந்தது.
தற்போது நான்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முன்வந்துள்ளது. விருதுநகர், காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர், ஈரோடு அல்லது பொள்ளாச்சி, தஞ்சாவூர் அல்லது ஆரணி ஆகிய தொகுதிகளில் நான்கு தொகுதிகள் ம.தி.மு.க.,விற்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.,வுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இந்த முடிவு குறித்து இன்று மாலை தாயகத்தில் நடக்கும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் அல்லது திருப்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்ய அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இன்று மதுரையில் நடக்கும் மாநில நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில், அ.தி.மு.க., ஒதுக்கீடு செய்யும் தொகுதிகளை பெற்றுக்கொள்வது குறித்து விவாதிக்கப்படுகிறது.
இன்று ராமநவமி என்பதால் இரவு போயஸ் கார்டனில் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவு உறுதி செய்யப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை, தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வரதராஜன் கையெழுத்திடுவர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.