Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

பிரதமர் கிலானியை நீக்க சர்தாரி ரகசிய திட்டம் : பாகிஸ்தானில் அரசியல் சதி





பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பதவி நீக்கம் செய்ய அதிபர் சர்தாரியும், பாக்., முஸ்லிம் லிக்(க்யூ) கட்சியும் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தலில் போட்டியிடுவதற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதற்கு, அதிபர் சர்தாரியே காரணம் என, நவாஸ் ஷெரீப் கட்சியினர் கருதினர். இதை வலியுறுத்தியும், முஷாரப் ஆட்சிக் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரியும் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.

சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அதிபர் சர்தாரி அடி பணிந்தார்.பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடப்பட்டது. நவாஸ் ஷெரீப், தேர்தலில் போட்டியிட தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் பாக்., அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.முன்னதாக இந்த விஷயத்தில், "எதிர்க்கட்சிகளுடனான பிரச்னையை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, பாக்., பிரதமர் கிலானி, அதிபர் சர்தாரிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தற்போது, கிலானியை பழிவாங்குவதற்கு அதிபர் சர்தாரி அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பஞ்சாப் மாகாணத்தில் நவாஸ் ஷெரீப் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு பாக்., முஸ்லிம் லீக் (க்யூ) கட்சியின் அதிருப்தியாளர்கள் திட்டமிட்டனர். இதற்கு அதிபர் சர்தாரி முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இதையடுத்து, பாக்., முஸ்லிம் லீக் (க்யூ) கட்சித் தலைவர்களுடன் சர்தாரிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது.மத்தியில் சர்தாரியின் பாக்., மக்கள் கட்சிக்கு பாக்., முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி ஆதரவு அளிக்க தயாராக உள்ளது. இது தொடர்பாக சர்தாரிக்கும், பாக்., முஸ்லிம் லீக் (க்யூ) கட்சித் தலைவர்களான சவுத்ரி சுஜாத் ஹுசைன் ஆகியோருக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்தது. பஞ்சாப் மாகாணத்தில் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கவும் திட்டம் தயாராகி உள்ளது.

தங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கு பிரதமர் கிலானி தடையாக இருப்பார் என அதிபர் சர்தாரியும், சவுத்ரி சுஜாத்தும் கருதுகின்றனர். பிரதமருக்கு கூடுதலாக அதிகாரம் இருப்பதும் இதற்கு முக்கிய காரணம். மேலும், நவாஸ் ஷெரீப் கட்சியுடனான பிரச்னையில் தனக்கு எதிராக செயல்பட்ட கிலானியை பழிவாங்கவும் சர்தாரி திட்டமிட்டுள்ளார்.நவாஸ் ஷெரீபுடன், கிலானி நெருக்கமாக செயல்படுவதாகவும் அவர் கருதுகிறார். இதுபோன்ற காரணங்களால் கிலானியை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கு சர்தாரியும், பாக்., முஸ்லிம் லீக் (க்யூ) கட்சித் தலைவர்களும் ரகசிய திட்டம் தீட்டியுள்ளனர்.இவ்வாறு அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறுகையில், "பிரதமரை பதவி நீக்கம் செய்வது, பார்லிமென்டை கலைப்பது போன்ற அதிகாரங்களை அதிபருக்கு அளிக்கும் சட்ட திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முஷாரப் ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த அரசியல் பழைய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்' என்றார்.

பாகிஸ்தானில் உள்ள நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது ராணுவத் தலைமைத் தளபதி அஷ்பாக் கயானி ராணுவ ஆட்சியைக் கொண்டு வரவிரும்பவில்லை என்பதை வெளிப்படையாக சமீபத்தில் அறிவித்தது பெரும் திருப்பமாகும். அதே சமயம் நவாஸ் ஷெரீபையோ அல்லது சர்தாரியையோ முழுவதுமாக அமெரிக்கா நம்பிச் செயல்பட முடியாத நிலை உள்ளது.காரணம், இந்த இருவரும் முன்னர் அதிக ஊழல்புரிந்து மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள். ஆனால், இன்று இவர்களை விட்டால் பாகிஸ்தானில் ஜனநாயகம் தொடர்வதில் சிக்கல் எழும். அதே சமயம் பிரதமர் கிலானி சற்று ஜனநாயகப் பாதையை தேர்வு செய்பவர் என்றும், அதே போல, அவருக்கு ஏதும் இதுவரை மோசமான பின்னணி இல்லாததாலும், அவர் மீது அமெரிக்கா உட்பட பல நாடுகள் கவனம் திரும்புகிறது.

மேலும், நீதிபதி இப்திகார் சவுத்ரி மீண்டும் தலைமைப் பொறுப்பேற்றால், சர்தாரி மீதான பழைய வழக்குகள் உயிர்ப்பித்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆகவே, மிகமோசமான அரசியல் சூழ்நிலை இருக்கும் நாட்டில் கிலானி புதிதாக முக்கியத்துவம் பெறலாம் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.

பாகிஸ்தான் பிரதமர் கிலானியை பதவி நீக்கம் செய்ய அதிபர் சர்தாரியும், பாக்., முஸ்லிம் லிக்(க்யூ) கட்சியும் ரகசிய திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More     Comments (33)