Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை



ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில், சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ராஜகோபாலையும் சேர்த்து மேலும் 5 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரின் மனைவி ஜீவஜோதி. அவரை 3-வது திருமணம் செய்ய ராஜகோபால் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சாந்தகுமாரின் உடல் கொடைக்கானலில் உள்ள பெருமாள் மலையில் வனத் துறை அதிகாரிகளால் 2001 அக்டோபர் 31-ல் மீட்கப்பட்டது.போலீஸார் விசாரணையில் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், தமிழ்ச்செல்வன், காசி விஸ்வநாதன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் உள்ளிட்டோர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர்.சாந்தகுமாரை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்கவில்லை என்று கூறி, ராஜகோபால் உள்ளிட்ட 6 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், மற்ற மூவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து பூந்தமல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ராஜகோபால் உள்ளிட்டோருக்கு தண்டனை அதிகரிக்க வேண்டும் என்று கோரி அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விசாரணையில் நிறைய தவறுகள் இருப்பதால் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ராஜகோபால் உள்ளிட்டோர் தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் நீதிபதி பி.கே.மிஸ்ரா, நீதிபதி ஆர்.பானுமதி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த பிறகு நீதிபதிகள் வியாழக்கிழமை (19-03-2009) அளித்தத் தீர்ப்பு:

சந்தர்ப்ப சூழ்நிலை மற்றும் ஆவண சாட்சியங்கள், ஜீவஜோதி மற்றும் அவரது தாயார் உள்ளிட்டோரின் சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, சாந்தகுமாரின் கொலை நிகழ்ந்த இடத்துக்கு அருகில் ராஜகோபால் இருந்துள்ளது உறுதியாகிறது. ராஜகோபால் இட்ட உத்தரவின் அடிப்படையிலேயே சாந்தகுமார் கொல்லப்பட்டதும் தெரிகிறது.

சாந்தகுமாரை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கியுள்ளதால், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் கொலை குற்றவாளிகள் என நிரூபணமாகிறது.

எனவே, ராஜகோபால், டேனியல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி விஸ்வநாதன், பட்டுராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

புலன் விசாரணையில் உள்ள சிறு சிறு தவறுகளுக்காக, ஒட்டுமொத்த குறைபாடு இருப்பதாகக் கூற முடியாது. புலன் விசாரணையில் ஏற்பட்ட தவறால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா என்கிற முக்கியமான கேள்வியைத் தான் பார்க்க வேண்டும்.

ராஜகோபாலுக்கு செஷன்ஸ் கோர்ட் இந்த அளவுக்கு அபராதத் தொகை விதித்ததில் எந்த நியாயமும் இல்லை. அபராத தொகை 55 லட்சம், 30 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்படுகிறது. ஜீவஜோதிக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தண்டனை விதிக்கப்பட்டவர்களை சிறைக்கு கொண்டு செல்ல செஷன்ஸ் கோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Read More     Comments (33)